தொப்பூர் கணவாயில் திடீர் விபத்து; நான்கு வாகனங்கள் தீயில் கருகின

Sunday 21, October 2018, 13:23:58

சேலத்தில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையான தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் இன்று அதிகாலை லாரி ஒன்று பிற வாகனங்கள் மீது பின்னோக்கிச் சென்று மோதியதால் ஏற்பட்ட தீ விபத்தில நாங்கு வாகனங்கள் கருகின. உரிய நேரத்தில் நல்லவேளையாக உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.

இன்று அதிகாலையில் கொப்பரைத் தேங்காய்களை ஏற்றி தொப்பூர் கணவாய் வழியாக தர்மபுரி நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றின் பிரேக் எதிர்பாராத விதமாக செயலிழந்தது. இதனால், மலைப்பாதையில் மேல்நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி தனது கட்டுப்பாட்டினை இழந்ததாக பின்னோக்கி இறங்கத் தொடங்கியது.

பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டினை இழந்ததாகப் பின்னோக்கி இறங்கத் தொடங்கிய லாரி, தனக்குப் பின்னால் மலைப்பாதையில் மேலேறிக் கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதத் தொடங்கியது. இதன் காரணமாக பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து தங்களுக்குள்ளாக மோதி ஏற்பட்ட விபத்து காரணமாகத் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

லாரியில் தீ மளமளவென பற்றியதால் அதன் பின்னால் வந்த கேஸ்டேங்கர் லாரி, இரண்டு கார் என மொத்தம் நான்கு வாகனங்களுக்கும் தீ பரவியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போக்குவரத்தினை ஒழுங்கு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

போலீசார் தந்த தகவலையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீவிரமாக தீயை அணைக்க போராடினார். சம்பவ இடத்தில் கேஸ்டேங்கர் லாரியும் தீப்பற்றத் தொடங்கியதும் பொதுமக்கள் மற்றும் அருகில் இருந்த வாகனங்கள் அவசரகதியில் அப்புறப்படுத்தப்பட்டன.

தீ மளமளவென பற்றியதால் கொழுந்துவிட்டு எரிந்த நிலையில் கூடுதலாக ஐந்து தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு தீயினை அணைக்கக் கடும் போராட்டம் நடந்தது.  ஒருமணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.

இதனால் சேலத்தில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்தத் திடீர்த் தீ விபத்தால் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தர்மபுரி டிஎஸ்பி காந்தி தலைமையிலான போலீசார் கருகிய வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்தி மலைப்பாதையில் போக்குவரத்தைச் சீர்செய்தனர்.

தப்பி ஓடிவிட்ட விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுனரைப் போலீசார் தேடி வருகின்றனர். இதில் அதிர்ஷ்டவசமாக கேஸ்டேங்கர் லாரியில் எரிபொருள் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடதக்கது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz