18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Friday 26, October 2018, 13:19:02

எடப்பாடி பழனிசாமி முதல்வராக நீடிப்பதை விரும்பாத டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி அப்போதைய தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவைச் சந்தித்து மனு ஒன்றினைத் தந்தனர். “முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர் தலைமையில் செயல்பட நாங்கள் விரும்பவில்லை” என்று அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

எதிர்ப்புத் தெரிவித்த 19 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகர் தனபாலுக்கு அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். இதனையடுத்து 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசை  சபாநாயகர் அனுப்பினார். அந்த நோட்டீசினைப் பெற்ற எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான எஸ்.டி.கே.ஜக்கையன் தனது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டவராக சபாநாயகரை சந்தித்து ‘உரிய விளக்கம்’ அளித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக மாற அவருக்கு நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

மீதமுள்ள 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார். இதனை ஏற்க மறுத்த 18 எம்.எல்.ஏ.க்களும் சபாநாயகரின் தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சுந்தர் ஆகியோர் கொண்ட இருநபர் பெஞ்சு விசாரித்தது. இந்த வழக்கில் ஜூன் மாதம் 14-ந்தேதி தீர்ப்பு கூறப்பட்டது. 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டது செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என்று நீதிபதி சுந்தரும் தீர்ப்பு அளித்தனர். நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக இந்த வழக்கு 3-வது நீதிபதிக்கு அனுப்பப்பட்டது.

3-வது நீதிபதியாக அறிவிக்கப்பட்ட சத்திய நாராயணன் கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் தொடங்கி 12 நாட்கள் இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தினார். அதனையடுத்து ஆகஸ்டு 31-ந்தேதி இந்த வழக்கில் வழக்குரைஞர்களின் இறுதி கட்ட வாதம் நடந்த பிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி சத்திய நாராயணனால் வழங்கப்பட்டது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும். இது எந்த விதத்திலும் சட்ட விரோதமானது அல்ல. இந்த வி‌ஷயத்தில் சபாநாயகர் முடிவில் எந்த தவறும் இல்லை. எனவே 18 எம்.எல்.ஏ.க்களின் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தடையும் நீக்கப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்த விதிக்கப்பட்டு இருந்த தடையும் விலக்கப்படுகிறது என்று நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி,  திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் ஆகியோர் மரணமடைந்ததையடுத்து  இந்த இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தேடுக்கப்படாததால் அந்த தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று ஐகோர்ட்டு உறுதி செய்து இருப்பதால் சட்டசபையில் காலியாக இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்து மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 214 ஆக குறைந்துள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையில் அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் அதற்கு 108 எம்.எல். ஏ.க்களின் ஆதரவு இருந்தால் போதுமானதாகும். ஆனால், தற்போது அ.தி.மு.க.வுக்கு 109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவைக் கொண்டுள்ளதால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டசபையில் கட்சி வாரியாக எம்.எல்.ஏ.க்கள் நிலவரம் :-

மொத்த இடங்கள்            - 234


அ.தி.மு.க.                       - 109


கருணாஸ், தனியரசு,

தமிமுன் அன்சாரி           - 3


தினகரனை ஆதரிக்கும்

எம்எல்ஏக்கள் 

(பிரபு, கலைச்செல்வன்,

ரத்தின சபாபதி)           - 3


தி.மு.க.                         - 88


காங்கிரஸ்                    - 8


தினகரன்                     - 1
முஸ்லிம் லீக்               - 1
சபாநாயகர்                 - 1


காலி இடங்கள்            - 20 

காலியாக இருக்கும் 20 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடைகள் அனைத்தும் நீக்கப்படுவதாகவும், தேர்தலை நடத்தலாம் என்றும் கோர்ட்டு அறிவித்துள்ளது.

தீர்ப்பு குறித்தத் தலைவர்களின் கருத்துகள்:

முதல்வர் பழனிசாமி:

எம்ஜிஆர், ஜெயலலிதா, இறைவனின் நல்லாசியால் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள அதிமுக  தயாராக உள்ளது.

ஸ்டாலின், தி.மு.க. தலைவர்:

தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து திமுக கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உடனடியாக முன்வர வேண்டும் எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க திமுக தயார்.

டிடிவி தினகரன், அ.ம.மு.க. :

அரசியலில் பின்னடைவு என்று ஒன்றும் இல்லை, இது ஒரு அனுபவமே.

தேர்தலைச் சந்திப்பதா அல்லது மேல்முறையீடு செய்வதா என்பதை எம்எல்ஏக்களே முடிவு செய்வார்கள். எடியூரப்பா வழக்கில் எப்படி உச்சநீதிமன்றம் தகுதிநீக்கம் செல்லாது என கூறியதோ, அதே போல் இந்த வழக்கிலும் நடக்க வாய்ப்புள்ளது.

தங்க தமிழ்ச்செல்வன், அ.ம.மு.க. :

நங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது கேலிக்குரியது, மக்கள் மன்றத்தில் முறையிட்டு நியாயம் கேட்போம். நீதிபதியின் தீர்ப்பை எப்படி எடுத்துக்கொள்வது என புரியவில்லை. தினகரன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்.

வைகோ, ம.தி.மு.க. :

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் உயர்நீதிமன்ற தீர்ப்பில் மேல்முறையீடு செய்வார்களா என்பது குறித்து எங்களுக்கு கவலையில்லை. ஜனநாயக நலனை கருதி 20 தொகுதிகளிலும் தேர்தலை நடத்த ஆணையம் முன்வர வேண்டும்

 பொன் ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. :

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை; காலம் தாழ்ந்து தீர்ப்பு வந்துள்ளது.

 

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz