தர்மபுரி: குடியிருப்புப் பகுதியில் பதுக்கப்பட்ட 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்

Friday 26, October 2018, 13:12:36

தர்மபுரி சாலைவிநாயகர் கோவில் காந்தி சிலை அருகே உரிய அனுமதியின்றி  ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் நேற்று தர்மபுரி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

தர்மபுரியில் காந்தி சிலை அருகே குடியிருப்புப் பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருவதாக தர்மபுரி நகரப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு தர்மபுரி உதவிக் காவல்துறைக் கண்காணிப்பாளர் காந்தி மேற்பார்வையில் ஆய்வாளர் இரத்தினகுமார் தலைமையிலான போலீசார் அதிரடிச் சோதனையினை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீடு பட்டாசுக் குடோனாக மாற்றப்பட்டுள்ளதையும், அந்த வீட்டின் 3 தளங்களிலும் தீபாவளி பண்டிகைக்கு விற்பனை செய்வதற்காக சரவெடிகள், பல்வேறு வகையான பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். 

சிவகாசியில் இருந்து மொத்தமாக பட்டாசுகளை வாங்கி வந்து அவற்றைச சிறிய அட்டை பெட்டிகளில் வேவேறுவிதமான அளவுகளில்  அடைத்து அவற்றின் மீது லேபிள்களை ஒட்டி ரீ-பேக் செய்து அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்துள்ளது.

இதுதொடர்பாக குடோன் உரிமையாளர் கிருபானந்தன், மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர் சரவணன் ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் உரிய அனுமதியும், போதிய பாதுகாப்பு ஏறபாடுகளும் இல்லாமல்  கள்ளத்தனமாக பட்டாசுகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து குடோன் உரிமையாளர் கிருபானந்தன், ஊழியர் சரவணன் ஆகியோரைக் கைது செய்த தர்மபுரி டவுன் போலீசார் அங்கிருந்த ஏராளமான பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர். தீபாவளி நெருங்கும் நேரத்தில் தர்மபுரி போலீசார் மேற்கொண்ட இந்த அதிரடி  நடவடிக்கை முறைகேடாகப் பட்டாசு வணிகத்தில் ஈடுபடும் பட்டாசு வணிகர்களுக்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz