ரேசன் கடைகளில் இணையக் குளறுபடியால் பொதுமக்கள் அவதி!

Saturday 10, October 2020, 01:51:36

wதமிழகத்தில் நியாய விலைக்கடைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு அனைத்து செயல்பாடுகளும் ஸ்மார்ட் கார்ட் மூலமே நடைபெறுகிறது. தமிழகத்தில் தற்பொழுது 1.99 கோடி ஸ்மார்ட் கார்டுகள் (ரேஷன் கார்டுகள்) உபயோகத்தில் உள்ளது. டிஜிட்டல் மயமாக்குதல் மூலம் எளிதில் பொருள்கள் அனைத்தும் மக்களின் கைக்கு சென்று விடும் என்று கூறியே அனைத்து நியாயவிலை கடைகளையும் டிஜிட்டல் மயமாகியது தமிழக அரசு.
ஆனால் திருச்சியில் பெரும்பாலான ரேசன் கடைகளில் சர்வர் பிரச்சனையால் பொதுமக்கள் தொடர்ந்து பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் நிலவுகின்றது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரி செய்ய மக்கள் நீதி மய்யம் வழக்கறிஞர் கிஷோர்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த விபரம் வருமாறு;
ஒரு காலத்தில் ரேசன் கடைகளில் பொருட்கள் கிடைக்குமா என பையும், கையுமா செருப்பு தேய அழைந்த பொதுஜனம். இன்று தங்கள் “கை ரேகையை” ரேசன் கடை மெஷின் ஏற்றுகொண்டு பொருட்கள் கிடைக்க வேண்டும் சாமி என தங்களது இஷ்ட தெய்வத்தை வேண்டும் சூழல் திருச்சியில் தற்பொழுது நிலவுகிறது.
ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தின் மூலம் நுகர்வோர் அனைவரும் ரேசன் கடைகளில் பொருட்களை வாங்கும் பொழுது பயோமெட்ரிக் முறையில் “கைரேகை” பதிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கை ரேகையை ஒவ்வொரு நுகர்வோரிடம் ரேசன் கடை ஊழியர்கள் பெரும் பொழுது பல்வேறு இடர்பாடுகள் எழுவதாக குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள்.

கரண்ட் இல்லாவிட்டால் பொருட்கள் கிடையாது. ரேகை இயந்திரத்தில் பொருந்தினால் தான் பொருட்கள் கிடைக்கும். ஓடிபி நம்பர் சொன்னால்தான் பொருட்களைத் தர முடியும் என்று அடுக்கடுக்கான விதிமுறைகளை பார்த்து மக்கள் அலறி போய்க் கிடக்கின்றனர்.

வயது முதிர்ந்தவர்கள் கைரேகை இயந்திரத்தில் பொருத்துவதில் சிரமம் இருக்கின்றது. அவர்கள் கைரேகை இயந்திரத்தில் பொருந்தினால் மட்டுமே ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய முடியும் என்று நியாய விலை கடைக்காரர்கள் கூற விடுகின்றனர்.

மேலும் ஓடிபி என்னை சொன்னால் மட்டுமே ரேஷன் பொருட்கள் என்று சொல்வது மேலும் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது காரணம் சில சமயங்களில் ஓடிபி வருவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. ஒரு தொலைபேசி இருக்கும் வீடுகளில் அந்த தொலைபேசியை வீட்டில் உள்ள மற்றவர்கள் எடுத்துச் சென்றுவிட்டால் போன் வரும் வரை ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் அந்த வீடே பட்டினியில் கிடைக்கிறது.

இதுகுறித்து ரேஷன் கடை காரர்கள் கூறும் பொழுது இயந்திரங்களில் ஏற்படும் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காலதாமதம் ஏற்படுகிறது. கொரோனா நேரத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் காலதாமதம் ஏற்படுவதால் மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஓடிபி வரும்வரை மக்களை காக்க வைக்க வேண்டி இருக்கிறது. இதுபோன்ற சிக்கல்களே காலதாமதத்திற்கு காரணமாக இருக்கிறது என்று கூறுகின்றனர்.

உதாரணத்திற்கு இந்த திட்டத்திற்கு முன்பு ஒரு நாளுக்கு ஒரு ரேசன் கடைகளில் சுமார் நூற்றி இருபது நுகர்வோருக்கு பொருட்களை கொடுக்க முடிந்த பணியாளர்களால், இன்று அறுபது நபர்களுக்கு கூட பொருட்களை கொடுக்க முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் இதற்கு முக்கிய காரணம் மேற்படி ரேசன் கடை மெஷின்களை கண்ட்ரோல் செய்யக்கூடிய சர்வர் குறைந்த திறன் வாய்ந்ததாக உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாவிலுள்ள அறுநூற்றுக்கும் மேற்பட்ட ரேசன் கடை மெஷின்களை திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள “தேசிய தகவல் மய்யத்தில்” உள்ள பிரதான சர்வர் தான் ஒருங்கிணைக்கிறது. மேற்படி சர்வரின் திறன் மிக, மிக குறைவாக உள்ளதே பல்வேறு பிரச்சினைகளுக்கு பொதுமக்கள் ஆளாக நேர்கிறது.

எனவே பொதுமக்களின் இன்னல்களை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz