சமயபுரம் அருகே வாய்க்காலில் விழுந்த குழந்தைகள் பிணமாக மீட்பு

Saturday 10, October 2020, 02:09:59

திருச்சியை அடுத்த சமயபுரம் பெருவளை வாய்க்கால் ஆற்றுப்பாலம் அருகே வசிப்பவர்கள் ரவிசந்திரன்- அனிதா தம்பதியினர். இவர்களது குழந்தைகளான  நரேசும், தர்ஷினியும் இயற்கை உபாதைகளை கழிக்க பெருவளை வாய்க்கால் கரையோரத்திற்கு சென்றனர்.

வாய்க்காலில் முழு அளவில் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக கரையில் இருந்த இரு குழந்தைகளும் வாய்க்காலுக்குள் தவறி விழுந்து வாய்க்காலின் நீரில் மூழ்கினர்.

இயற்கை உபாதைக்கு சென்ற குழந்தைகளை காணவில்லையே என பெற்றோர் வாய்க்கால் கரைக்கு வந்துபார்த்தபோது, உபாதை கழித்த இடத்தில் வித்தியாசம் தெரிந்ததையடுத்து குழந்தைகள் வாய்க்காலில் இறங்கியிருக்கலாம் என்பதால் சமயபுரம் தீயனைப்புத்துறைக்கு தெரிவித்தனர்.

சமயபுரம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேற்று வந்து வாய்க்காலில் இறங்கி தேட ஆரம்பித்தனர். லால்குடி கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவு வரை தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பின்னர் தேடுதலை நிறுத்தியவர்கள் இன்று அதிகாலை முதல் தேடுதல் பணியில் தீவிரம் காட்டிய நிலையில், வாய்க்காலில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் குழந்தைகள் இருவரது உடல்களும் பள்ளிவிடை பாலம் கீழே உள்ள கருவேல மரத்தில் சிக்கியிருந்ததை கண்டு பிடித்தனர் தீயணைப்புத்துறையினர்,.

பின்னர், குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே வீட்டில் இரண்டு மழலைகளும் மரணமடைந்த இந்த சோக சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz