உலக அஞ்சல் தினக் கொண்டாட்டம்!

Saturday 10, October 2020, 02:17:31

உலக அஞ்சல் தினம் அக்.09 அன்று சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, திருச்சியிலும் உலக அஞ்சல் தினம் சமூக ஆர்வலர்களால் கடைபிடிக்கப்பட்டது.

இது குறித்து திருச்சி அஞ்சல் தலை சேகரிப்பாளரும், யோகா ஆசிரியருமான விஜயகுமார் தெரிவிக்கையில்,

முதன் முதலில் 09.10.1874-ல் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் சர்வதேச தபால் ஒன்றியம் (Universal Postal Union) ஸ்தாபிக்கப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 9-ம் தேதி உலக தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தபால்துறை எல்லாத் துறைகளையும் விட சிறப்பான தொன்றாகும். மனித வாழ்வின் அங்கமாக தற்பொழுதும் விளங்கிக் கொண்டிருக்கிறது. அறிவியல் கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன் செய்திக் கருவியாய் விளங்கியது தபால் துறை தான்.

ஆரம்ப காலத்தில் ஒருவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செய்திகளை அனுப்பப் பயன்பட்டது கடிதங்கள். அவை வெறும் காகிதங்கள் மட்டும் அல்ல. சில கடிதங்கள் காவியமாகவும், வரலாறாகவும் ஆகியுள்ளன!

உத்தியோகப்பூர்வமான தகவல் பரிமாற்றங்களுக்கு இன்றும் தபால் முறை அவசியமாகின்றது. ஆரம்ப காலத்தில் தபால்களைப் போடுவதற்கு தபால்பெட்டிகள் பயன்படுத்தப் படவில்லை. கடிதங்களைக் கொண்டு செல்பவர்களே கடிதங்களைப் பெற்றும் வந்தனர்.

1653 ஆம் ஆண்டு லாங்குவிலே (Longueville) மாகாண மின்ஷ்டர் பாகுட் (Minister Fouget) என்ற தபால் அதிபரின் மனைவியின் யோசனையின் பேரில்தான் தபால்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தபால்பெட்டிக்கு மாதிரி வடிவத்தை சார்லஸ் ரீவ்ஸ் என்பவர் அமைத்துக் கொடுத்தார். சிவப்பு வண்ணத்தில் தபால்பெட்டிகன் வைக்கப்பட்டதன் காரணம் மக்களின் பார்வையை உடனடியாக ஈர்க்கும் சக்தி கொண்டதால் ஆகும்.

இன்றளவும் நம் உலகம் அறிவியல் ரீதியாக வளர்ந்து தான் வருகின்றது. அவ்வகையில் எனது அஞ்சல் தலை எனது கையில் ‘My Stamp’ (மை ஸ்டாம்ப்). திட்டம் வழிவகுக்கிறது.

நம் புகைப்படங்களையே நாம் அஞ்சல் தலைகளாக பெறும் முறை ஆகும். இதற்கு ஆகும் செலவு ரூ.300. இதனை முறையாக தபால் துறையில் விண்ணப்பித்து ரூ.300-க்கு பணிரெண்டு ஐந்து ரூபாய் தபால் தலைகளைத் பெறலாம். இவை அனைத்து வயதினருக்கும் பொருந்தும். நம் புகைப்படங்களையே அஞ்சல் தலையாக பார்க்கும் இந்த நடைமுறை மகிழ்ச்சிக்குரியதாகும். இதை நாம் ஒரு பரிசாகவும் பிறகுக்கு அளிக்கலாம்.

அஞ்சல் என்னும் தபால் சேவை நாடு இனம் மொழி மதம் இன வேறுபாடுகளைக் களைந்து இதயங்களை இணைக்கும் ஒப்பற்ற சேவையாக அமைந்துள்ளது ஒவ்வொருவரின் பண்பாடு கலாச்சாரம் ஏற்ப மொழிகளை சிறகுகள் இன்றி பறக்கக்கூடியது கடிதங்கள் தான். அவ்வகையில் அஞ்சல் சேவை ஒவ்வொருவருக்கும் மிக உன்னதமானது ஆகும்.

பொழுது போக்கின் அரசன் என்று கூறப்படும் கூடிய அஞ்சல்தலை சேகரிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது தபால் துறையில் மக்களின் பயன்பாடு குறைந்து கொண்டே வரும் வேளையில், அஞ்சல் துறையையும் அதன் மேன்மையையும் மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் உலக அஞ்சல் தினம் கடைபிடிக்கப்படுகிறது என்றார்.

 

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz