புதிய மீன் மார்க்கெட் செல்லும் சாலையை சீரமைக்கக சிபிஐ கோரிக்கை!

Saturday 10, October 2020, 02:25:35

திருச்சி மாநகராட்சி கோ-அபிசேகபுரம் பகுதிக்குட்பட்ட உறையூர் லிங்கம்நகர் பகுதியில் நாளை முதல் புதிய மீன்மார்கெட் செயல்பாட்டிற்கு வருகின்றது. இங்கு பல லட்சக்கணக்கில் செலவு செய்து மீன் குளிரூட்டும் அறைகள், அகன்ற அங்காடிகள், கேரளா, நாகை என பல்வேறு இடங்களில் இருந்தும் வாகனங்கள் வந்து மீன்களை இறக்குவதற்கு ஏற்ப மார்கெட் வளாகத்திற்குள் சிமெண்ட் வளாகம் உள்ளிட்டவைகள் செய்து வைக்கப்பட்டிருக்கின்றன.

அதே நேரம், நாச்சியார்கோவில் சந்திப்பிலிருந்து மீன்மார்க்கெட் வரை உள்ள சாலைகள், மீன் மார்க்கெட்டிற்கு மீன்கள் ஏற்றி வரும் கன்டெய்னர் கனரக வாகனங்கள் வந்து செல்லும் சாலையாக இல்லாமல் குண்டும் குழியுமாக உள்ளது.

இதனைப் போர்க்கால அடிப்படையில் தரமான சாலையாக உடனே மாற்றி அமைக்கக்கோரியும், சாலிகளில் வேகத்தடைகள் அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் செய்யக்கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு பகுதி சார்பில் கோ-அபிசேகபுரம் உதவிஆனையரிடம் மனு அளித்தனர்.

இந்த சந்திப்பின்போது கட்சியின் மேற்கு பகுதி துனை செயலாளர் சரண் சிங், பொருளாளர் இரவீந்திரன், பகுதிக்குழு உறுப்பினர்கள் ப.துரைராஜ், கே.முருகன், இரா.ஆனந்தன், ஏஐடியுசி மாவட்டசெயலாளர் கோ.இராமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz