தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறந்துக்கொண்டிருக்கின்றது. அதேநேரம் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறையும், துணை ராணுவத்தினரும் ஆங்காங்கே கொடி அணிவகுப்பினை நடத்தி வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதாமாக துணை ராணுவப்படையினருக்கு கொரோனா தடுப்பூசி திருச்சியில் போடப்பட்டது.
அதன்படி, திருச்சியில் மாநகர காவல்துறையினருடன் இணைந்து துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வரை சென்று முடிவுற்றது.
அதேபோல் மன்னார்புரம் ஜெகன்மாதா ஆலயத்தில் இருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
முன்னதாக திருச்சி மேற்கு தொகுதி பறக்கும் படை கண்காணிப்பாளர் ஜோசப் தலைமையில் துணை ராணுவ வீரர்களும், பறக்கும் படை போலீசாரும் திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.