விவசாயிகள் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முற்றுகை - போலீஸ் காலில் மண்டியிட்டு போராட்டம்!

Saturday 06, March 2021, 16:26:27

100-வது நாளாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் மத்திய அரசு அலுவலகமான பிஎஸ்என்எல் மண்டல அலுவலகத்தை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு அறைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் புதிய வேளான் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 100−வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் மண்டல அலுவலகத்திற்குள் நுழைந்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மனித எலும்புகளை பிரதமருக்கு அனுப்பி வைக்கப் போவதாக தெரிவித்தனர்.

இந்த போராட்டத்திற்கு தலைமை வகித்த அய்யாக்கண்ணு தெரிவிக்கையில், "விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். 100 நாட்களாக டெல்லியில் கடும் குளிரில் போராடி வரும் விவசாயிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் முன் வைக்கப்பட்டன.

formerr

மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு அழிவுதான் ஏற்படும், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறி, அதற்கு அடையாளமாக எலும்புக் கூடுகளை பிரதமர் மோடிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றோம் என்றார்.

விவசாயிகளின் போராட்டம் குறித்து கேள்விப்பட்ட கண்டோண்மெண்ட் காவல் உதவி ஆணையர், ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் பி.எஸ்.என்.எல்.அலுவலகத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையில் மேல் சட்டை இல்லாமல் அரை நிர்வாணமாக அமர்ந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் தரையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இரண்டு விவசாயிகள் கண்டோண்மெண்ட் காவல் உதவி ஆணையர் மணிகண்டன் மற்றும் ஆய்வாளர் கோசல்ராம் காலில் விழுந்தார்கள். ஒரு விவசாயி காவல் ஆய்வாளர் காலில் விழுந்தபோது அவர் பின்னோக்கி சென்றார். இன்னொரு விவசாயி காவல் உதவி ஆணையர் மணிகண்டன் காலை பிடித்து கொண்டு சிறிது நேரம் தரையில் படுத்து இருந்தார். போலீஸ்சார் அவரை எழுப்ப முயன்றனர் ஆனால் உதவி ஆணையர் அசராமல் அதே இடத்தில் நின்றார்.

இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பிஎஸ்என்எல் அலுவலகம் மூடப்பட்டது. பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz