‘விடியலுக்கான முழக்கம்' - சிறுகனூரில் நாளை திமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்!

Saturday 06, March 2021, 16:22:35

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ம் தேதி நடக்கிறது. அதையொட்டி அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சார யுக்திகள், தேர்தல் அறிக்கைகள் போன்ற பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே திருச்சி திருப்புமுனையை தரும் என்ற நம்பிக்கையுடன் திமுகவினர் சென்னை-திருச்சி பைபாஸ் சாலையில் சிறுகனூர் அருகே சுமார் 700 ஏக்கரில் திமுக 11-வது மாநில மாநாட்டினை நடத்த தேதி அறிவித்து பணிகளை தொடர்ந்தது.

இதற்கிடையே கடந்த மாதம் தேர்தல் ஆணையம் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதியை அறிவித்தது. அதில் தமிழகத்திற்கு ஏப்ரல் 6-ம் தேதி 16-வது சட்டமன்றத் தேர்தல் என அறிவித்தது.

இதனால் மாநாட்டுக்காக ஏற்பாடு செய்துகொண்டிருந்த இடத்தில் திமுக நிர்வாகிகள், பொதுக்கூட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்தது. அதன்படி நாளை திறந்தவெளி திமுக பொதுக்கூட்டம் சிறுகனூரில் நடைபெறவிருக்கின்றது.

இதற்கான பணிகளை திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக முதன்மைச்செயலாளருமான கே.என்.நேரு களத்தில் இறங்கி பணிகளை துரிதப்படுத்தி வருகின்றார். இன்றே திமுகவின் பிற மாவட்ட முக்கிய நிர்வாகிகள் திருச்சியில் முகாமிட்டிருக்கின்றனர். திருச்சியில் அனைத்து விடுதிகளும் நிரம்பி வழிகின்றன.

dmk1

சிறுகனூரில் 700 ஏக்கரில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்திற்கு 3 மேடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சுமார் 2 லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் தயார்படுத்தப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

திமுக பொதுக்கூட்டம் முறைப்படி நாளை மதியம் 2 மணிக்கு துவங்குகின்றது என்றாலும் காலை முதலே பொதுக்கூட்டத்திற்கு திமுக நிர்வாகிகள் மாநிலம் முழுவதிலிருந்தும் திரள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தமிழகம் முழுவதுமுள்ள திமுக நிர்வாகிகள் தத்தம் பங்கிற்கு நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆட்களை அழைத்துவர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

நாளை மதியம் விமானம் மூலம் திருச்சி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறுகனூரில் 90 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் திமுக கொடியேற்றி வைத்து மேடைக்கு செல்கின்றார்.

கொடிக்கம்பத்தில் இருந்து மேடை வரை தொண்டர்களுக்கு நடுவே செல்வதுபோல் நடைமேடை அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த நடைமேடையில் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் பார்த்து கையசைத்து செல்ல திட்டமிடப்பட்டிருக்கின்றது.

dmi3

எங்கிருந்து பார்த்தாலும் திமுக தலைவரையும், அவரது உரையையும் காணுமளவிற்கு திறந்தவெளி மைதானத்தில் ஆங்காங்கே எல்.இ.டி., திரைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. சுமார் 350 ஏக்கருக்கும் மேல் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் திமுக நிர்வாகிகளின் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான இடங்கள் சுத்தப்படுத்தப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றன.

மைதானத்தின் அருகே சிற்றுண்டி கடைகள், தேநீர் கடைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல் தற்காலிக கழிப்பறைகளும் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளன.

இந்த பொதுக்கூட்டத்தின்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கின்றார். இந்த பொதுக்கூட்டம் திமுக தலைவரை முதல்வர் அரியணையில் அமர வைப்பதற்கு முன்னோட்டமான பொதுக்கூட்டமாக அமையும் என்பதும், திமுக வரலாற்றிலேயே இப்படியொரு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதில்லை என்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

siruga

திமுக பொதுக்கூட்டத்தையடுத்து திருச்சியில் இருந்து பொதுக்கூட்ட நிகழ்விடம் வரை சாலையில் இரு புறங்களிலும் திமுக கொடிகள் சாலையை அலங்கரித்திருக்கின்றன. பொதுக்கூட்ட நுழைவு வாயிலுக்கு முன்பு பெரியார், அண்ணா, கலைஞர் கட்-அவுட்டுகள் வரிசையில் மு.க.ஸ்டாலின் கட்-அவுட்டும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றன.

இதுகுறித்து திமுக முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு தெரிவிக்கையில்;
தமிழகத்தின் அடுத்த 10 ஆண்டு களுக்கான தொலைநோக்கு பார்வை அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இக்கூட்டத்தில் வெளியிட உள்ளார்.

dmkkk

தமிழகத்தை மேம்படுத்தும் வகையிலான திட்டங்களை மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளதாலும், இத்தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாலும் இந்த பொதுக்கூட்டம் நிச்சயம் தமிழக வரலாற்றில் இடம் பிடிக்கும்.

இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ள அறிவிப்புகளை அடுத்த 2 வாரங்களுக்குள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மூலம் தமிழகத்தில் உள்ள 2 கோடி குடும்பங்களிடம் கொண்டு சேர்க்க உள்ளோம் என்றார்.

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz