" மே 2ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு புதிய விடியலாக திமுக ஆட்சி அமையும்” - திருச்சி கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முழக்கம்!

Monday 08, March 2021, 17:42:17

தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற தலைப்பில் திருச்சியை அடுத்த சிறுகனூரில் நேற்று இரவு திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் பொதுக்கூட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

சிறுகனூர் பொதுக்கூட்டமேடைக்கு மீண்டும் மாலை 6.40 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தார். அப்போது தொண்டர்கள் அவரை உற்சாகம் பொங்க வரவேற்றனர். வாணவேடிக்கைகள் மைதானத்தை அதிர வைத்தன.

மேடையில் தோன்றிய மு.க.ஸ்டாலின் தொண்டர்களை நெருங்கி சந்திக்கும் வகையில் அமைக்கப்பட்ட நடைமேடையில் நடந்து சென்று தொண்டர்கள் மத்தியில் கையை அசைத்தபோது தொண்டர்களின் ஆரவாரம் காதைச் செவிடாக்கியது....

பின்னர் மு.க.ஸ்டாலின் பேசத் தொடங்கினார்.

அவர் பேசுகையில்; "நாம் கட்சி தொடங்கியவுடன், வீதியில் பேசிக் கொண்டு இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சட்டமன்றத்திற்குள் வந்து பேச தைரியம் உண்டா? என்று கேள்வி எழுப்பிய போது, நாம் தேர்தலில் நிற்கலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பதற்காகக் கூடிய இடம் தான் திருச்சி.

நாம் தேர்தலில் நிற்கலாம் என்று உங்களைப் போன்ற கழகத் தொண்டர்கள் அன்று அனுமதி வழங்கியதால், சட்டமன்றத்துக்குள் சென்றோம். ஒரு முறையல்ல; ஐந்து முறை தமிழகத்தை ஆண்டது திராவிட முன்னேற்றக் கழகம்.

அதற்கு வழியமைத்துக் கொடுத்தது திருச்சி. அந்த மாநகரத்தில் கூடியிருக்கிறோம்!

இதனை மாநாடு என்று நான் அறிவிக்கவில்லை, மாபெரும் பொதுக்கூட்டம் என்றுதான் அறிவித்தேன். ஆனால் கழகத்தின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் மற்ற மாவட்டச் செயலாளர்களும் இதனை மாநாடாகவே நடத்தி விட்டார்கள்.

இதனை ஒரு மாநாடு என்று கூடச் சொல்ல முடியாது. ஐந்து மாநாடு ஒரே நேரத்தில் நடப்பது போல இருக்கிறது. ‘நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு’ என்று நான் சொல்லி இருக்கிறேன். எதிரியை நேருக்கு நேராக எதிர்ப்பதிலும், நட்பை நெஞ்சுக்கு நெஞ்சாக அரவணைப்பதிலும் நிகரானவர் நேரு என்றும் நான் சொல்லி இருக்கிறேன். இதற்கு மேல் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

நேருக்கு நிகர் நேருதான் என்று வேண்டுமானால் சொல்லலாம். அவர் மட்டுமல்ல, இந்த ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காடுவெட்டி தியாகராஜன், வைரமணி ஆகிய மூவரும், முப்படைத் தளபதிகளைப் போல வழிநடத்தி வருகிறார்கள்.

அவர்களுடைய திறமை எவ்வளவு பெரியதென்றால், இந்த மாநாடு அளவுக்கு பெரியதென்றுதான் சொல்ல வேண்டும். அவர்களையும் அவர்களுக்குத் தோளோடு தோள் கொடுத்து பாடுபட்டிருக்கும் தோழர்களையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

"திமுக தொடங்கியவுடன் தேர்தலில் போட்டியிடலாமா? என்ற முடிவு திருச்சியில் தான் எடுக்கப்பட்டது. முன்பு இந்த பொதுக்கூட்டமானது மாநாடாகவே நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலைக் கருத்தில்கொண்டு பொதுக்கூட்டமாக மாற்றி அறிவிக்கப்பட்டது.

ஆனால் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் மாவட்ட செயலாளர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்டோர் ஐந்து மாநாடுகள் ஒரே இடத்தில் நடப்பது போல் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

sta3

திமுக ஆட்சியில் இருந்தபோது அமைத்த அனைத்து கட்டமைப்புகளையும் அதிமுக ஆட்சியினர் அழித்து விட்டனர். ஆட்சியில் இருந்தபோது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் பதவியிழந்த முதலமைச்சர் என்ற பெருமையை ஜெயலலிதா பெற்றார். அவரது தோழி சசிகலாவும் சிறைக்கு சென்றார்.

இந்தச் சமயத்தில் காலில் விழுந்து, ஊர்ந்து சென்று எடப்பாடி பழனிசாமி பதவியைப் பெற்றார். பின்னர் பாஜகவிற்கு அடிமையாகி, அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து ஆட்சி அமைத்தார். பன்னீர்செல்வத்திற்கு துணை முதலமைச்சர் பதவியும் கொடுத்து விட்டார். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை நாசமாக்கி விட்டனர்.

இந்த ஆட்சிக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மே 2ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு புதிய விடியலாக திமுக ஆட்சி அமைய உள்ளது. சமூகநீதி, மாநில சுயாட்சி, நவீன மேம்பாடு, கல்வி வளர்ச்சி, சமத்துவ ஆட்சியாக அமையும்.

எனது கனவு திட்டத்தை தற்போது திருச்சியில் அறிவிக்கிறேன். தொலைநோக்கு திட்டமாக 7 திட்டங்கள் இங்கே அறிவிக்கப்படுகிறன. இதற்கு ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள் என பெயரிடப்பட்டுள்ளது. முதலில் 7 துறைகள் சீரமைக்கப்பட உள்ளன. 10 ஆண்டுகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இந்தத் திட்டம் அறிவிக்கப்படுகிறது.

 

ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நிலை தமிழ்நாட்டில் உருவாக்கப்படும். அதற்கு முதலாவதாக பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகிய ஏழு துறைகளில் கவனம் செலுத்தப்படும்.

புதிதாக 10 லட்சம் வேலைவாய்ப்புகள் ஆண்டுதோறும் உருவாக்கப்படும். தற்போதுள்ள வேலையில்லாத் திண்டாட்டம் பாதியாக குறைக்கப்படும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒரு கோடி மக்கள் 10 ஆண்டுகளில் மீட்கப்படுவார்கள். இதன் மூலம் தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் ஒருவர் கூட இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டில் வேளாண் சாகுபடி அளவு 75 சதவீதமாக உயர்த்தப்படும். குறையற்ற குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

உள்நாட்டு உற்பத்தியில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு தற்போது ஒதுக்கீடு செய்யப் படுவதை விட மூன்று மடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். முன்மாதிரியாக மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

கைக்கெட்டும் தொலைவிலேயே தலைசிறந்த கல்வி மற்றும் சுகாதார வசதிகள் மக்களுக்கு கிடைக்கும். கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.

சமூகநீதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க இருக்கிறோம். ரேசன் கடைகளில் உணவுப்பொருட்களைப் பெறும் அனைத்துக் குடும்பங்களும் இதனால் பயனடையும். விரைவில் அமைய உள்ள திமுக ஆட்சி ஒரு கட்சியின் ஆட்சியாக இல்லாமல் ஒரு இனத்தின் ஆட்சியாக அமையும்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து தொலைநோக்கு திட்டங்களும் திமுக ஆட்சியில் முழுமையாக நிறைவேற்றப்படும். தமிழ்நாடு எழுச்சி பெற வேண்டும். இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. மக்களின் ஆதரவுடன் திமுக அரசு அமையும். இது அனைவரது அரசாங்கமாக இருக்கும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை திமுகவினர் மக்களிடம் கொண்டு சேர்த்தால் திமுகவின் வெற்றியை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது.

sta

திமுகவின் ஆட்சி என்பது ஐந்து ஆண்டுகளுடன் முடியாமல், அவை தொடர்ந்தால் தான் இந்தத் திட்டங்களை நிறைவேற்ற முடியும். என்நாளும் திமுக ஆட்சிதான் என்ற நிலையை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும். அதிமுக ஆட்சியின் கவுண்டவுன் தற்போது தொடங்கி உள்ளது" என்றார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என். நேரு உள்ளிட்ட பலர் பேசினர். இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுக மாநில மாவட்ட நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz