திருச்சி பால்பண்ணை அருகே புதிதாக திறக்கப்பட்ட லாரி பார்சல் புக்கிங் அலுவலகத்தை சிஐடியு தொழிற்சங்கத்தினர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியின் பிரதான சந்தையான காந்தி மார்க்கெட் சுற்றுவட்டார பகுதிகளில் லாரி பார்சல் புக்கிங் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த லாரி பார்சல் புக்கிங் அலுவலகத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்கத்தில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக கூலி உயர்வு கேட்டு லாரி புக்கிங் அலுவலகத்தில் பணியாற்றும் சிஐடியு சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் லாரிகளில் சரக்கு ஏற்ற முடியாமலும், இறக்க முடியாமலும் தேங்கிக் கிடந்தன.
இதைத்தொடர்ந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் "பேரமைப்பு லாரி புக்கிங் அலுவலகம்" திருச்சி பழைய பால்பண்ணை அருகே இன்று காலை திறக்கப்பட்டது. பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அப்போது சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தினர் அங்கு வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து காவல்துறை உயரதிகாரி மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அப்போது பேச்சுவார்த்தைக்காக லாரி புக்கிங் அலுவலகத்திற்குள் நுழைந்த தொழிற்சங்கத்தினர் அலுவலகத்தில் இருந்த பொருட்களை சூறையாடினர். அங்கு பணியில் இருந்த ஊழியர்களை கட்டையால் தாக்கினர். இதில் ஒரு சிலருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
திறப்பு விழாவுக்காக அலுவலக நுழைவுவாயில் அமைக்கப்பட்டிருந்த சாமியான பந்தல், வாழை மரங்களை தொழிலாளர்கள் அடித்து நொறுக்கி சாய்த்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த அடிதடியில் ஈடுபட்டு, வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணை தலைவர் கந்தன் என்பவரை தாக்கி மண்டைய உடைத்த சி.ஐ.டி.யு., சுமைதூக்கும் தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் ராமர், ராஜா உள்ளிட்ட 10 பேர் மீது பேரமைப்பினர் திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸில் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
அதேநேரம் திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய சி.ஐ.டி.யூ.வை, திமுக தலைவர் உடனடியாக கூட்டணியில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திமுக கூட்டணியில் உள்ள இவர்களுடைய அராஜகம் இப்போதே தொடங்கிவிட்டதாகவும், இது நாளைக்கு மிகப்பெரிய பிரச்சனையாக அமையும் என்பதால், இந்த சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படியில்லை என்றால் நாங்கள் அனைத்துக் கடைகளையும் மூடி அவர்களுக்கு எதிராக எங்களுடைய பலத்தைக் காட்டுவோம் என வணிகர்கள் சங்க பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு தெரிவித்துள்ளார்.
திறப்பு விழாவுக்காக அலுவலக நுழைவுவாயில் அமைக்கப்பட்டிருந்த சாமியான பந்தல், வாழை மரங்களை தொழிலாளர்கள் அடித்து நொறுக்கி சாய்த்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.