கைவிட்டமருத்துவக் கல்லூரி; நோயாளியின் காலைக் காப்பாற்றிச் சாதித்த அரசு மருத்துவர்!

Monday 08, March 2021, 18:04:33

திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட மருங்காபுரி வடகம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சாலை விபத்தில் சரவணனின் வலது முழங்கால் மூட்டு மற்றும் தொடை எலும்புகள் சுக்கு நூறாக உடைந்திருந்ததால் அவருக்கு சிகிச்சையளித்த தனியார் மருத்துவமனை எப்படியும் 6, 7 லட்சம் செலவாகும் என சொல்லி அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்தது.

கூலித்தொழிலாளியான சரவணன் செய்வதறியாது திணறினார். பின்னர் தனியார் மருத்துவமனையில் இருந்து திருச்சி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அதற்குள் அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டு தொடை எலும்பு மற்றும் மூட்டில் சீல் வைத்துவிட்டது. இதனால் காலை காப்பாற்ற வழியில்லை என்று திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கைவிரித்தனர்.

MEDICA

தனது காலை காப்பற்ற வழியில்லை என்று கூறப்பட நிலையில், வேறு வழியின்றி செய்வதறியாது திகைத்துபோய் வெதும்பி நின்றவரிடம் ஒரு சிலர் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் இது போன்ற கைவிடப்பட்ட நம்பிக்கை இழந்த நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர் இருக்கிறார் அவரிடம் சென்று மருத்துவம் செய்ய முயற்சி செய்யுங்கள் எனச்சொன்னதையடுத்து அவர் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வர உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

சரவணனை பரிசோதித்து பார்த்த மருத்துவர் ஜான் விஸ்வநாத் அவருக்கு 5 பெரிய அறுவை சிகிச்சைகளை செய்யவேண்டும் எனக்கூறி அறுவை சிகிச்சை மூலம், கடந்த 3 மாதங்களில் எலிசரோ ரிங் ஃப்க்ஸேட்டர் என்கிற நவீன எலும்பு வளர் சிகிச்சைமுறையை செய்து அதன் மூலம் எலும்பினை வளர செய்ததுடன் நோய் தொற்றையும் குணமாக்கினார்.

MEDDS

5 பெரிய அறுவை சிகிச்சை செய்து சோர்ந்து விடாமல் சரவணனுக்கு விடா முயற்சியை மேற்கொண்டு நோய் தொற்று சரியானவுடன் இன்று தொடை எலும்பை இணைக்கும் அறுவை சிகிச்சை டூவல் லாக்கிங் கம்ரஷன் பிளேட் மூலும் செய்யபட்டது.

இந்த அறுவை சிகிச்சை சுமார் 6 மணிநேரம் தொடர்ந்து நடைபெற்றது. எபிஸ்பைனல் என்கிற நவீன நீண்ட மயக்க மருந்து மூலம் மயக்க மருந்து நிபுணர் சிந்து இரண்டு கால்களையும் மரத்து போக செய்ததுடன் அறுவை சிகிச்சைக்கு பின்னரும் தொடர்ந்து 4 நாட்களுக்கு காலில் வலி உணர்வு தெரியாமல் இருக்க தேவையான மருந்துகளை முதுகு தண்டுவடத்தில் செலுத்தி சிறப்பாக கவனித்து வருகிறார்.

6 மணி நேரம் சளைக்கமால் நடந்த அறுவை சிகிச்சைக்கு அறுவை சிகிச்சை உதவி செவிலியர்கள் தமிழ்செல்வி, சித்ரா, செல்வி, அறுவை அரங்கு உதவியாளர்கள் கலா, கோபிநாத் ஆகியோர் பெரும் உதவி செய்தனர்.

அறுவை சிகிச்சையின் போது 4 பாட்டில்கள் இரத்தம் செலுத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு இரத்தம் வேண்டும் என்றவுடனே கொடுத்து உதவிய மணப்பாறை அரசு மருத்துவமனை இரத்த வங்கிக்கும் தலைமை மருத்துவருக்கும் நன்றி தெரிவித்த மருத்துவர் ஜான் விஸ்வநாத், நோயாளி தற்போது நலமுடன் இருக்கிறார். தையல் பிரிக்க 12 நாட்களும், முழுமையாக குணமடைய 2 மாதங்களும் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

MEDI

இதுபோன்ற சிக்கலான சவலான அறுவை சிகிச்சைகளை உயர் சிகிச்சை உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளே தயங்கும் போது, எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைகளுக்கு அடிப்படை வசதியே இல்லாத துவரங்குறிச்சி மருத்துவமனையில் செய்திருப்பது மிகப்பெரிய சாதனைதான் என அப் பகுதி பொதுமக்கள் அவரை வாழ்த்து மழையில் நனைத்துக் கொண்டிருக்கின்றனர்.

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz