தர்மபுரி: விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வுப் பேரணி

Thursday 01, November 2018, 15:10:56

தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப்பணித்துறை தர்மபுரி கோட்டம் சார்பில் நடத்தப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வுப் பேரணியினை தர்மபுரி  மாவட்ட ஆட்சித் தலைவர் மலர்விழி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இப் பேரணியில் பள்ளி மாணவர்களுக்குப் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது மற்றும் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவ மாணவியர்க்கு வழங்கினார்.

விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வுப் பேரணியில் 500 பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப் பேரணி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வழியாக இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை சென்றது.

இதனைத் தொடர்ந்து இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து ஒத்திகை நடைபெற்றது. 01.11.2018 முதல் 07.11.2018 வரை 7 நாட்கள் தொடர்ந்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெறுகிறது. இந்த விழிப்புணர்வுக் குழுவில் 15 தீயணைப்பு மீட்புப்பணித்துறை பணியாளர்கள் பங்கு பெறுகிறார்கள். மேலும், மாவட்டம் முழுவதும் ஒலிபெருக்கியுடன் கூடிய விழிப்புணார்வு வாகனமும் பிரச்சாரப் பணியில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லாகான், மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆனந்த், நிலைய அலுவலர் மணிவண்ணன் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz