உயர்கல்வியில், தமிழகம்தான் இந்தியாவிற்கே முன்னோடி - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்

Friday 02, November 2018, 13:12:17

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் ஜெயலஷ்மி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 6-வது பட்டமளிப்பு விழாவில் 420  பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற  உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

உயர்கல்வியைப் பொருத்தவரை, தமிழகம்தான் இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது. கல்விதான், சமூகத்தின், நிலையான நீடித்த வளர்ச்சிக்கு உதவியாக அமையும் எனக் கருதி, தமிழகத்தை கல்வியில் சிறந்த மாநிலமாக மாற்றியவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அவர் வழியொட்டி ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த நிதி நிலை அறிக்கையில் உயர்கல்விக்காக ரூ.4,620.20 கோடியை ஒதுக்கிச் சிறப்புச் சேர்த்துள்ளார்.

தமிழ் நாட்டில் 58 பல்கலைக்கழகங்கள்,      2,470 கல்லூரிகள் உள்ளன. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011  முதல் 2017 வரை, தமிழகத்தில் 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 16 - அரசு பலவகைத் தொழில் நுட்பக்கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என மொத்தம் 65 புதிய கல்லூரிகளைத் தொடங்கினார்கள். மேலும், 2017- 2018 இல் அம்மா அவர்களின் வழிதொடரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைமையில் 8 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 3 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என மொத்தம் 76 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் 2018-2019 ஆம் கல்வியாண்டில் கடலூர் மாவட்டம், கூடுவெளி திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டை சேலம் மாவட்டம், வனவாசி ஆகிய மூன்று இடங்களில் அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனூர; ஆகிய இடங்களில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கீழ் செயல்பட்டு வந்த இரண்டு பலவகை தொழில் நுட்பக்கல்லூரிகள் அரசு பலவகை தொழில் நுட்பக்கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன.

அடுக்கடுக்காகப் புதிய கல்லூரிகள், பாடப்பிரிவுகள் எனத் தொடங்கியதன் காரணமாக, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தில், தமிழ்நாடு உயர்வான நிலையைப் பெற்றுள்ளது. இல்லாமை என்னும் பிணி இல்லாமல் கல்வி நலம் எல்லோருக்கும் என்று சொல்லி கொட்டு முரசே..’ என்று பாடிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்  சிந்தனையை, நடைமுறைப்படுத்தி இங்கு இல்லாமை’ என்ற நிலையை மாற்றி, எல்லோருக்கும் எப்போதும் கல்வி’ கிடைக்கச் செய்த பெருமையும், சிறப்பும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களையேச் சாரும்.

அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு மூலம் அரசு ஒதுக்கீட்டில் பி.இ. படிப்பிற்கான 2018-2019 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையில் குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தில் தொப்பூர் ஜெயலஷ்மி பொறியியல் கல்லூரியில் தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது என்பது பாராட்டத்தக்க ஒன்றாகும். மேலும், மாணவர்கள் சேர்க்கையில் சேலம் மண்டல அளவில் 2 வது இடமும், கோவை பிராந்திய அளவில் 11 வது இடமும், மாநில அளவில் 28வது இடத்திலும் இக் கல்லூரி உள்ளதை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தர்மபுரி மாவட்டத்திலேயே இக் கல்லூரியில் தான் மாணவர்கள் சேர்க்கை விகிதமும், மாணவர்கள் தேர்ச்சி விகிதமும் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசானது பல சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேரும் முதல் தலைமுறையைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கும் கல்வி கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது.

வருங்காலத்தில் தொழிற்திறன் வாய்ந்த மனிதவளம் மேலும் அதிகரிக்கவும், பொறியியல் பட்டதாரிகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கவும் வழிவகை ஏற்படும் என்பதை இந்நேரத்தில் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மாணவர்களை வேலைக்கு தயார்படுத்துவது மட்டுமல்லாது, அவர்களை ஆற்றல் உடையவர்களாக, உலக சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய திறமை படைத்தவர்களாகவும் உருவாக்க வேண்டும்.  மாற்றங்களை ஏற்று பல புதிய மாறுதல்களை உருவாக்கும் பொறுப்பு மாணவர்களாகிய உங்களுக்கு உண்டு.

பட்டம் பெறும் மாணாக்கர்களாகிய நீங்கள் பட்டம் பெற்றதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து படித்து, பல்வேறு திறன்களைப் பெற்று, குறிப்பாக ஆளுமைத்திறன், செயலாக்கத்திறன், சிந்தனைத்திறன், ஆழ்ந்து பணியாற்றும் பண்பு, மதிநுட்பம், தொலைநோக்குப்பார;வை இவைகள் அனைத்தும் ஒருங்கே வரப்பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இக் கல்லூரியில் 400 மாணவர்கள் இளநிலை பொறியியல் பட்டங்களையும், 37 மாணவர;கள் முதுநிலை பொறியியல் பட்டங்களையும் பெறுவது பாராட்டத்தக்க ஒன்றாகும்.

மாணவர்களாகிய நீங்கள், ஒரே ஓர் எண்ணத்தை கையில் எடுங்கள். அந்த எண்ணத்தையே உங்கள் வாழ்க்கை ஆக்குங்கள். அந்த எண்ணத்தையே சிந்தியுங்கள், கனவு காணுங்கள். உடலின் ஒவ்வொரு செல்லும் நரம்பும் அந்த எண்ணத்திலேயே  ஊறட்டும். இதுவே வெற்றியின் ரகசியம் என்கிறார் சுவாமி விவேகானந்தர். அந்த அடிப்படையில் தான் உங்கள் பயணம் தொடங்கவேண்டும், தொடரவேண்டும். 

இன்றைய காலகட்டங்களில் மாணவர்களின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டு பல விதமான கல்விச் சேவைகளை வழங்கிவரும் இவ்வளவு சிறப்பு மிக்க ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியின் நிறுவனர்  சி. சுப்ரமணியன் அவர்களையும், இக் கல்வி நிர்வாகிகள் மற்றும் இக் கல்லூரியின் வளர்ச்சியில் பங்கு வகித்த அனைவரையும் என் மனதார பாராட்டுகிறேன்” என பேசினார்.

இவ்விழாவில் கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் மணிகண்டன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் பொன்னுவேல்,  கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz