பாலியல் வழக்கில் சிக்கிய சாமியார் சதுர்வேதி தேடப்படும் குற்றவாளி: போலீஸ் அறிவிப்பு!

Friday 09, November 2018, 19:49:05

இரண்டு பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கடந்த 2004-ஆம் ஆண்டு கைதானவர் சென்னையினைச் சேர்ந்த சதுர்வேதி சாமியார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த சதுர்வேதி, தற்போது தலைமறைவாகி விட்டார். இதையடுத்து இவரைத் தேடப்படும் குற்றவாளியாக சென்னை மாநகரக் குற்றவியல் காவல்துறை அறிவித்துள்ளது.

தன்னைத் தானே சாமியாராகப் பிரகடனப் படுத்திக் கொண்ட சதுர்வேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் என்ற பெயரில் அறக்கட்டளையை நடத்தி வந்தார். வெங்கடாசரவணன், பிரசன்ன வெங்கடாச்சாரியார் ஆகிய பெயர்களும் சதுர்வேதிக்கு உண்டு.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், தனது மனைவி மற்றும் மகள்  ஆகிய இருவரையும் கடந்த 2004-ஆம் ஆண்டு சாமியார் சதுர்வேதி கடத்திச் சென்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளித்தார். மேலும் தனது வீட்டின் கீழ்த்தளத்தினை சதுர்வேதி ஆக்ரமித்துள்ளதாவும், தன்னிடம் இருந்து சுமார் 15 லட்சம் வரையில் மிரட்டி பிடுங்கியுள்ளதாகவும் தன்னுடைய புகாரில் சுரேஷ் குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் சதுர்வேதியை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ஆனால், குண்டர் சட்டத்தின் கீழ் சதுர்வேதியைக் கைது செய்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க சதுர்வேதி விடுதலை செய்யப்பட்டார்.  இதைத்தொடர்ந்து மத்திய குற்றவியல் பிரிவு காவல்துறையினரால் கடந்த 2016-ஆம் ஆண்டு சதுர்வேதி சாமியார்  மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சில தினங்களில் ஜாமீனில் வெளிவந்த சாமியார் சதுர்வேதி தப்பித் தலைமறைவாகி விட்டார். அவர் மீதான வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளியாக இருந்த சமயத்தில் சதுர்வேதி தலைமறைவானதையடுத்து பல்வேறு இடங்களில் போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பல ஆன்மிக சொற்பொழிவுகளை மேற்கொண்டுள்ள வெங்கடாசாரியார் சதுர்வேதி அடிக்கடி வடநாட்டிற்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் தற்போது சதுர்வேதி நேபாளம் தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இந்நிலையில், சதுர்வேதியை தேடப்படும் குற்றவாளியாக சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 

சதுர்வேதியின் புகைப்படங்களை அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் சதுர்வேதி பிடிக்கப்பட்டுவிடுவார்  என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz