தர்மபுரி: பாலியல் வன்முறைக்கு மேலும் ஒரு பலி

Tuesday 13, November 2018, 16:24:34

பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் அண்மைக் காலங்களில் தமிழகத்தில் தொடர் நிகழ்வுகளாக மாறி வருகின்றன. பாலியல் வன்மம் காரணமாக ஆத்தூரைச் சேர்ந்த 13 சிறுமி ராஜலட்சுமி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்கு முன்பே தர்மபுரி மாவட்டம் அரூர் சிட்லிங் மலைக்கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் டூ  மாணவி சௌமியா பாலியல் வன்முறைக்குப் பலியான பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

பாலியல் வன்முறைக்குப் பலியான மாணவி சௌமியா சிட்லிங் மலை கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை - மலர் ஆகியோரின் மகள் ஆவர். பாப்பிரெட்டிபட்டியில் மலைவாழ் மக்களுக்கான அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்; பள்ளியின் விடுதியில் தங்கிப் படித்து வந்த சௌமியா கடந்த 5-ம் தேதி தீபாவளி விடுமுறையின்போது சிட்லிங் மலைக்கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்த சமயத்தில் இந்த விபரீதம் நடந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பில் கூறப்படுவதாவது......

சிட்லிங் மலை கிராமத்தைப் பொறுத்த மட்டில் அங்குள்ள பெரும்பான்மையான வீடுகளில் கழிப்பறை வசதி என்பதே கிடையாது. திறந்தவெளி மறைவிடங்களே அந்தப் பகுதி மக்களின்  கழிப்பறைகளாகப் பயன்பட்டு வந்துள்ளன. கடந்த 5ந் தேதி தீபாவளி விடுமுறைக்காக தனது வீட்டுக்கு வந்திருந்த சௌமியா இயற்கை உபாதையை கழிக்கத் வீட்டருகே உள்ள புதர்கள் நிறைந்த மறைவான பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த ரமேஷ், சதீஸ் ஆகிய 2 இளைஞர்கள் மாணவி செளமியாவைத் தூக்கிச் சென்று கற்பழித்து விட்டதாகவும், மாணவி சத்தம் போடாமல் இருப்பதற்காக அவரது வாயில் துணியை வைத்து அழுத்தி, கைகால்களைக் கட்டிப் போட்டு விட்டு இந்தக் கொடூரத்தினை நடத்திய அவர்கள் அந்தப் பகுதியில் வேறு யாரோ வருவது போன்று சத்தம் கேட்டதை அடுத்து அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். அந்தப் பகுதி வழியாக வந்த ஒருவர் கட்டுக்களை அவிழ்த்து சௌமியாவைக் காப்பாற்றியிருக்கிறார், பின்னர் வீட்டுக்குச் சென்ற சௌமியா தனது தாயாரிடம் நடந்ததைக் கூறிக் கதறி அழுதுள்ளார்.

இதனையடுத்து செளமியா தனது தந்தை அண்ணாமலையுடன் கோட்டப்பட்டி காவல்நிலையத்துக்குச் சென்று தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் புகார் மனுவைக் கொடுத்துள்ளார். புகாரைப் பெற்றுகொண்ட காவல்துறையினர் மறுநாள் திரும்ப வருமாறு கூறி அனுப்பியுள்ளனர். மறுநாள் செவ்வாய்க் கிழமையன்று காவல்நிலையத்துக்கு வந்த செளமியாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வசதியாக தர்மபுரியில் உள்ள வள்ளலார் இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே உடல்நிலை பாதிப்பிலிருந்த சௌமியாவுக்கு அங்கு வாந்தி, மயக்கம் என உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர் அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர்கள் பரிந்துரையின் பேரில் உடனடியாகத் தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட செளமியாவுக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு, உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் சிகிச்சை பலனின்றி கடந்த நவம்பர் 10ந்தேதி சனியன்று காலை 8 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார் என்று நடந்த சம்பவம் குறித்து மாணவியின் தரப்பில் கூறப்படுகிறது.

மாணவி இறந்த செய்தி கேட்டதும் அவரது கிராமத்து மக்கள் கொதித்துப் போயினர். மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்களை கைது செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கைக் கோரி மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் ராமசாமி தலைமையில் மாணவியின் கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பகத்துக்கு அனுப்பியது ஏன்? அரசு மருத்துவமனையில் மாணவிக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதா? மாணவியின் மரணத்துக்கு காரணம் என்ன? போன்ற கேள்விகள் அவர்களால் எழுப்பப்பட்டன.

அத்துடன், இந்த விவகாரத்தில் விதிமுறைகள் மீறி செயல்பட்டதோடு அல்லாமல் தாமதமாக வழக்குப் பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணத் தொகை வழங்க வேண்டும், ஆதிதிராவிடர்-பழங்குடியினர் சட்டப்பிரிவின் கீழ் வழக்கை விசாரிக்க வேண்டும், மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்,

பிரேத பரிசோதனை 2 சிறப்பு டாக்டர்களைக் கொண்டு நடத்தப்பட வேண்டும், பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள். மாணவியின் உடல் வைக்கப்பட்டிருந்த தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையின் முன்பாக DYFI அமைப்பின் சார்பிலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடந்தது.

இதையடுத்து போலீசாரின் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டன. தலைமறைவான ரமேஷ், சதீஸ் ஆகிய இருவரையும் தேடிவந்தத் தனிப்படைப் போலீசார் நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பதுங்கியிருந்த சதீசை சுற்றி வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். மேலும், தலைமறைவான ரமேசைத் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்டுவந்த ரமேஷ் 12ந் தேதி மதியம் 12 மணிக்கு சேலம் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர், ரமேஷை வருகிற 19-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சிவா உத்தரவிட்டதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் போலீசார் ரமேசை சேலம் மத்திய சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர்.

இதற்கிடையே மாணவி சௌமியாவின் பிரேதப் பரிசோதனை சிறப்பு மருத்துவர்கள் குழுவால் 12ந் தேதி மாலையில் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரேத பரிசோதனை முழுவதும் விடியோவாகப் பதிவு செய்யப்பட்டது.  போஸ்ட்மார்ட்டம் முடிந்து இரவு 8 மணி சுமாருக்கு சிட்லிங் மலைக் கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட மாணவி சௌமியாவின் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது.   

மாணவியின் புகாரினை முறைப்படி விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள கோட்டப்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் நேற்று ஆயுதப்படைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக அரூர்  அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். மாணவி பாலியல் துன்புறுத்தல் குறித்த விவகாரத்தில் புகாரினைப் பெற்ற போலீசார் நடவடிக்கையினை ஏன் உடனடியாக எடுக்கவில்லை என்பது குறித்தும் போலீசார் மீது கூறப்படும் விதிமீறல் குற்றச்சாட்டு குறித்தும் அரூர் சார்ஆட்சியர் புண்ணியகோட்டி விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணை அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி சௌமியா இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்த மருத்துவ உடற்கூறு ஆய்வறிக்கை இன்னும் வெளியாகவில்லை. அதே போல அரூர் அரசு மருத்துவமனையில் சௌமியாவுக்கு நடைபெற்ற உடல் பரிசோதனை அறிக்கை, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சௌமியாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சி.டி.ஸ்கேன் பரிசோதனை விபரங்களும் இன்னமும் வெளியாகவில்லை. இந்த மருத்துவ அறிக்கைகள் வெளியான பின்னர் இந்த வழக்கில் மேலும் பல எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக பரபரப்பாகப் பேச்சுகள் அடிபடுகின்றன.

-க.சண்முகவடிவேல்

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz