நிதி தொடர்பான குற்றம்: Nissan கார் நிறுவன அதிபர் கைது

Tuesday 20, November 2018, 19:17:47

ஜப்பானியக் கார் நிறுவனமான நிஸ்ஸானின் தலைவர் கார்லோஸ் கோன் (Carlos Ghosn) நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாளை மறுநாள் நிறுவனத்தின் மேலாண்மைக் குழு கூடும். அதனைத் தொடர்ந்து கோன் பணிநீக்கம் செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது சம்பளத்தைக் குறைத்துக் கூறியதாகவும், நிறுவனச் சொத்துகளைச் சொந்தக் காரணங்களுக்குப் பயன்படுத்தியதாகவும் கோன் மீது குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.

உலகின் ஆகப் பெரிய கார் நிறுவனங்களின் பட்டியலில் நிஸ்ஸான்  6ஆம் இடத்தில் உள்ளது. சில மாதங்களாகவே அந்த நிறுவனத்தின் நிதி தவறாகக் கையாளப்பட்டதாக கூறப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடந்து வந்தது.

ஜப்பானில் 100 மில்லியன் யென்னுக்கு (yen) மேலான சம்பளம் பெறும் அதிகாரிகளின் சம்பளங்கள் வெளியிடப்படவேண்டும் என்ற சட்டம் 2010இல் நடப்புக்கு வந்தது.

2011இலிருந்து நிஸ்ஸானின் தலைவர் கார்லோஸ் கோன் தனது மொத்த சம்பளத்தில் இருந்து 5 பில்லியன் யென்களைக் குறைத்து தம்முடைய சம்பளத்தைக் குறிப்பிட்டுள்ளதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz