தர்மபுரி: கந்துவட்டிக் கொடுமையால் இளம்பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை

Wednesday 21, November 2018, 19:47:44

கந்துவட்டிக் கொடுமை காரணமாக தர்மபுரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சம்பவம் குறித்துக் கூறப்படுவதாவது:

தர்மபுரி பாளையம்புதூரை சேர்ந்தவர் மைதிலி இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தற்போது தனது தாய் ராஜேஸ்வரியுடன் டீச்சர்ஸ் காலனியில் வசித்து வருகிறார்.

அங்கு அவர் புத்தகக்கடை ஒன்றினை நடத்தி வந்த நிலையில் பணப்பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக பழனி என்பவரிடம் கந்து வட்டிக்கு இருதாயிரம் ரூபாய் கடன் வாங்கி, அதற்கு வெற்று பாண்டு பேப்பரில் கையழுத்து போட்டுக் கொடுத்துள்ளார்.

பழனியிடம் தான் வாங்கிய இருதாயிரம் ரூபாய்க் கடனை வட்டியுடன் சேர்த்து எண்பதாயிரம் ரூபாயாக மைதிலி திரும்பச் செலுத்தியுள்ளார். ஆனால், அப்படியும் இன்னும் 70000 ரூபாய் தர வேண்டும் என பழனி தொடர்ந்து மைதிலியை ஆபாச வார்த்கைளால் திட்டியும் மிரட்டியும் வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு மைதிலி வீட்டிற்குச் சென்ற பழனி கடன் பாக்கியைக் கேட்டு அவரை  ஆபாசமான வார்த்தைகளால் கடுமையாகப் பேசியுள்ளார். "வாங்கின கடனைத் திருப்பித் தர  வக்கில்லாம ஏன் உசிரோட இருக்கிற? இதுக்குத் தூக்குல தொங்கி நீ உசிர விட்டுரலாம்"  என்று பழனியின் வசவுகளால் அவமானம் தாங்காமல் மைதிலி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட மைதிலியின் சடலத்தை தர்மபுரி நகர காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டார். தற்கொலைக்குக் காரணம் கந்துவட்டி என்பது தெரியவர மைதிலியின் தயார் ராஜேஸ்வரியிடம் புகாரினைப் பெற்ற ஆய்வாளர் உடனடியாக பழனியினைக் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து ஆய்வாளர் ரத்தினகுமார் கூறும்போது, “இந்தப் பெண் மைதிலி இறந்த பிறகே அவர் கந்துவட்டிக் கொடுமையால் இறந்தது தெரியவந்தது. இது குறித்து முன்கூட்டியே என்னிடத்தில் அவர் புகார் செய்திருந்தால் அவர் அதிகமாகச் செலுத்திய பணத்தினை அவருக்குத் திரும்பக் கிடைக்கச் செய்திருப்பேன். காவல்துறையின் உதவியினை நாடாமல் அநியாயமாக அவர் தனது உயிரினை மாய்த்துக் கொண்டது வருந்தத் தக்கது. கந்துவட்டி கொடுமையைச் செய்பவர்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் எங்களுக்குத் தகவல் தந்தால் உடனடியாக அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

கந்து வட்டிக் கொடுமையால் இளம்பெண் ஒருவர் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தர்மபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz