கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த நடிகை கஸ்தூரி

Friday 23, November 2018, 18:37:33

கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளன. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் உதவி வருகின்றனர். இந் நிலையில், நடிகை கஸ்தூரி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை இன்று அனுப்பி வைத்தார்.

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் நடிகை கஸ்தூரி கூறுகையில், 'சொல்ல முடியாத துயரில் உள்ள டெல்டா மக்களுக்கு என்னால் முடிந்த அளவில், ரூ.12 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளேன். நானும் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல உள்ளேன்.

1000 குடும்பத்திற்கு தேவையான அதிநவீன வாட்டர் ஃபில்டர் மற்றும் போர்வைகள், கொசுமருந்து, காய்ச்சல் நிவாரணி மாத்திரைகள் சானிடரி நாப்கின்கள் போன்றவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு லாரி மூலம் அனுப்புகிறோம்.

உணவுப் பொருட்கள், மருத்துவ உதவி போன்றவை பலதரப்புகளிருந்து வந்து கொண்டிருக்கும் வேளையில், குடிநீர் பற்றாக்குறை அந்தப் பகுதிகளில் பூதாகரமாகத் தலையெடுத்துள்ளது. இன்னும் நாட்கள் செல்லச் செல்ல, சுத்தமான பாதுகாப்பான குடிநீர் மிகப் பெரிய தேவையாக இருக்கப் போகிறது. இதற்கு அத்தியாவசியமான 1000 நீர் சுத்திகரிப்பு கருவிகளை அனுப்புகிறோம்.

இந்தச் சுத்திகரிப்பு கருவிகள் (syphon filter) பேரிடர் காலத்தில் பயன்படுத்த மிகவும் உகந்தவை. எங்கும் எடுத்து செல்லலாம், சுலபமாகப் பயன்படுத்தலாம், எத்தனை மாசுபட்ட தண்ணீரையும் தெளிந்த பாதுகாப்பான சுத்தமான குடிநீராக மாற்றிவிடும். நீரைக் கொதிக்க வைக்க அவசியமில்லை.

பிளாஸ்டிக் பாட்டில்களையும் கேன்களையும் நாடவேண்டியதில்லை, இரண்டு வருடங்களுக்கு குறையாமல் செலவில்லாமல் குடிநீரை சுத்தப்படுத்திக் கொள்ளலாம் (Recyclable  and   biodegradeable).  வெளிநாட்டில் மட்டுமே இப்போதைக்கு கிடைக்கிறது.

பாதிக்கப்பட்ட இடங்களில் ராணுவ உதவி அவசியத் தேவை. நிவாரணப் பணிகளில் மத்திய அரசு இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும். நமக்குத் தெரியாத ஆள்கள் மூலமா உதவிகள் போய்ச் சேருவதை விட தெரிந்தவர்கள் மூலமாக அவற்றினை அனுப்பி வைப்பது நல்லது” என்றார்.

 

 

 

 

 

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz