காவல் நிலையங்களில் நடத்தப்படும் கட்டைப் பஞ்சாயத்து - வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் குற்றசாட்டு.

Saturday 24, November 2018, 16:25:21

சேலம் மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் வழக்கறிஞர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும், வழக்கறிஞர்களைத் தரக்குறைவாக பேசியக் காவல் ஆய்வாளர்களைக் கண்டித்தும் சேலம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று முன்தினம் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடந்தது.

இதில் பங்கேற்க வந்திருந்த தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வேல் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழகம் முழுவதும் காவல்துறையினர், காவல் நிலையங்களில் குறிப்பாக சிவில் தொடர்பாக வழக்குகளில் சிவில் சட்ட நடவடிக்கையை காவல்துறையினரே கையில் எடுத்து கொண்டு கட்டைப் பஞ்சாயத்து நடத்தி வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கதக்கது” என்று குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விரைவில் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாகவும் தெரிவித்த அவர், ஆளுங்கட்சியினரின் உதவியோடு இது போன்ற கட்டைப்பஞ்சாயத்துகள், காவல் நிலையத்திலேயே நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் வழக்கறிஞர்களின் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும், இதனைத் தடுக்கும் வகையில் இந்திய பார் கவுன்சில், வழக்கறிஞர்களுக்கு என தனி ஸ்டிக்கர் வழங்கிட உள்ளதாகவும், வழக்கறிஞர்கள் அல்லாதோர் இதனைப் பயன்படுத்திட முடியாது என்றும் உறுதிபட தெரிவித்தார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz