கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேஷியாவாழ் தமிழர்கள் நிதி திரட்டி உதவி

Sunday 25, November 2018, 22:11:35

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை ஆகியவற்றால் அண்மையில் வீசிய கஜா புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும், விவசாய விளைநிலங்களையும்,  உடமைகளையும் இழந்து மீளாத்துயரில் வாடிவருகின்றனர், மீட்புப்பணிகளும் நடைபெற்று வருகிறது. 

புயலின் பாதிப்பில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழர்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மலேஷியா வாழ் வெளிநாட்டு தமிழர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதிஉதவி திரட்டினர்.

மலேஷியாவாழ் வெளிநாட்டுத் தமிழர்கள் சங்கம்(TEM) கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதிஉதவி திரட்டும் உயரிய நோக்கத்தோடு  - பெருநடை (Walkathon) நவம்பர் - 24 தேதி மாலை 4.30 மணிக்கு லேக் கார்டன் KL Park பகுதியில்  ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் கோலாலம்பூர் பகுதில் வாழும் தமிழர்கள் பெரும்பாலானவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

இடுக்கண் களைவதாம் நட்பு - என்ற நம் தமிழ் மறை வள்ளுவம் வழி நம் உறவுகளுக்கு நடப்பாய்க் கைகொடுப்போம், மதம் மறந்து சாதி துறந்து, அரசியல் அகற்றி ஒற்றைத் தமிழினமாய் இணைந்து ஊன்றுகோலாய் நம் உறவுகளுக்குக் கை கொடுப்போம், வா உறவே கை கொடு - என்ற முழக்கத்துடன் இந்த பெருநடைப் நடைபயணம் தொடங்கப்பட்டது.

ஆண்கள், பெண்கள், சிறுகுழந்தைகள் ஆகியோர் இந்த நடைப்பயணத்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் மலையாளி குடும்பம் அமைப்பு சார்பாக ஸ்ரீஜித் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்வுக்குத் தங்கள் ஆதரவினை வழங்கினர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேஷியாவாழ் வெளிநாட்டு தமிழர்கள் ஒன்றுகூடி அனைவரும் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்துக் கொண்டனர். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் இணைந்து சிறு கடை அமைத்து தின்பண்டங்கள் விற்பனை செய்து நிதி திரட்டினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  மலேஷியாவாழ் வெளிநாட்டுத் தமிழர்கள் அமைப்பு சார்பாக சக்திவேல், பாலாஜி, N.பாலாஜி, விஜய், கோமதி, பூர்ணிமா, சவிதா ஆகியோர் செய்திருந்தனர்.

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz