மலேசிய மாரியம்மன் கோவில் இடமாற்றத்துக்கு கிளம்பிய எதிர்ப்பால் வெடித்தது பயங்கர கலவரம்

Tuesday 27, November 2018, 01:33:04

மலேசியாவில் சிலாங்கூர் மாநிலத்தின் சுபாங் ஜெயா (Subang Jaya) நகரில் உள்ள சீஃபீல்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் நூறாண்டுத் தொன்மை வாய்ந்தது; மலேசியவாழ் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான இந்தக் கோவிலை வேறு ஒரு இடத்துக்கு மாற்ற நடந்து கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு எதிராகக் கிளம்பியுள்ள எதிர்ப்பு வன்முறையாக நேற்று இரவு முதல் வெடித்துள்ளது.

இந்தப் பிரச்னை குறித்துக் கூறப்படுவதாவது: சுமார் 130 வருடங்களுக்கு முன்பாக அதாவது 1891ஆம் ஆண்டில் மலேசியா சிலாங்கூர் மாநிலத்தில் சுபாங் ஜெயா (Subang Jaya) நகரில் உள்ள சீஃபீல்ட் என்ற புறம்போக்கு இடத்தில் தமிழர்களால் ஒரு ஒரு மாரியம்மன் கோவில் கட்டப்பட்டது. அந்தக் கோவிலை இத்தனை ஆண்டுகாலமாகப் பராமரித்துப் பாதுகாத்து வந்ததன் விளைவாக அந்த இடம் மலேசியாவின் முக்கிய வழிபாட்டுத்தலமாக மாறியது.  

இந்த நிலையில் கோவில் கட்டப்பட்டிருந்த அந்தப் புறம்போக்கு இடத்தை மலேசிய அரசாங்கம் ஒரு சீனருக்கு விற்றுவிட்டது. அந்த இடத்தினை விலைக்கு வாங்கிய அந்த சீனர் தரப்பில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறு ஒரு மாற்று இடத்தில் புதியதாக மாரியம்மன் கட்டிக் கொள்வதற்கான இடத்தையும், கோவில் நிர்மாணத்துக்கு  இந்திய மதிப்பில் சுமார் 1 கோடி ரூபாய் தொகையும் கொடுப்பதாகவும் முன்வந்துள்ளார்.

ஆனால், ஏற்கனவே இருந்த இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்துக்குக் கோவில் இடமாற்றம் செய்யப்படுவதை அங்குள்ள பெரும்பாலோனோர் விரும்பவில்லை. கோவிலைக் காலி செய்து கோவில் அமைந்துள்ள நிலத்தை விட்டுத் தர மாட்டோம் என்று உணர்வுபூர்வமாக அவர்கள் பிடிவாதம் செய்ய, இடத்தை வாங்கிய சீனரோ ஆட்களை ஏவி வலுக்கட்டாயமாக கோவிலில் இருந்தவர்களை வெளியேற்றி கோவிலைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றார். இதில் கோவில் பக்தர்களுக்கும், நில உரிமையாளரின் அடியாட்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்  பயங்கர வன்முறையாக வெடித்துக் கலவரமாக மாறியது.

இந்தக் கோவில் கலவரத்தில் வெடித்த வன்முறையினால் எண்ணற்றோர் தாக்கப்பட்டு படுகாயமுற்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எண்ணற்ற வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

வன்முறை குறித்தத் தகவல் கிடைத்து அந்த இடத்துக்கு சுபாங் ஜெயா காவல்துறையினர் விரைந்து வந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடித்து விரட்டி அவர்களில் ஏழு பேரினைக் கைது செய்த பிறகே வன்முறை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. நடந்த கலவரம் குறித்து முழுமையான போலீஸ் விசாரணைக்குத் தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.  

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz