சொத்தை வாங்கி விட்டு பெற்றவர்களுக்குச் சோறு போடாத மகன்கள் - பத்திரப் பதிவை ரத்து செய்து உத்தரவிட்ட ஆட்சியர்

Tuesday 27, November 2018, 19:04:44

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் 75 வயது விவசாயி கண்ணன்( என்பவரும் அவரது 63 வதான மனைவி பூங்காவனம். இவர்களுக்கு பழனி, செல்வம் என  இரண்டு மகன்கள் உள்ளனர். அரசு பஸ் கண்டக்டராக வேலை பார்க்கும் பழனியும், கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வரும் செல்வம் இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விவசாயி கண்ணன் தனது 5 ஏக்கர் நிலத்தை, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மகன்களுக்கும் தலா 2.5 ஏக்கர் வீதம் தான செட்டில்மென்ட் பத்திரப் பதிவு மூலம் எழுதி வைத்தார். சொத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு, மகன்களின் நடவடிக்கைகள் மாறி, பெற்றோரைக் சோறு போடாமல், கண்டு கொள்ளாமல் தவிக்க விட்டனர்.

இளைய மகன் செல்வம், தந்தையை அடித்துத் துன்புறுத்தவும் தொடங்கினார். உணவுக்கும் வழியின்றி மனைவியுடன் வீதியில் தவித்த கண்ணன், இருவரும் தலா 60 சென்ட் நிலத்தையாவது கொடுங்கள், விவசாயம் செய்து சாப்பிடுகிறோம் எனக் கேட்டும், மகன்கள் அதற்குச் செவிசாய்க்க மறுத்து விட்டனர். 

இதனால் கண்ணன், அவரது மனைவி பூங்காவனம் ஆகியோர், கடந்த வாரம் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமியிடம் இதுகுறித்துப் புகார் தெரிவித்தனர்.

ஆட்சியரின் உத்தரவின் பேரில், ஆர்டிஓ(பொறுப்பு) உமாமகேஸ்வரி, கண்ணனின் மகன்களை அழைத்து விசாரித்தார். அப்போது, மூத்த மகன் பழனி மட்டும் பெற்றோருக்கு ஜீவனாம்சம் தருவதாகவும், 60 சென்ட் நிலத்தை தருவதாகவும் தெரிவித்தார். இளைய மகன் செல்வம் சொத்துக்களை தர மறுத்துவிட்டார். இதுதொடர்பான அறிக்கையை கலெக்டரிடம், ஆர்டிஓ ஓப்படைத்தார்.

இதைத் தொடர்ந்து, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் கீழ், மகன்களுக்கு தான செட்டில்மென்ட் பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, கண்ணன் தனது மகன்களுக்கு எழுதித் தந்த தான செட்டில்மென்ட் பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது.

இளைய மகன் செல்வம் வேறொருவருக்கு விற்ற அவருக்கு பாகமாக வந்த நிலத்தின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் 5 ஏக்கர் நிலமும் விவசாயி கண்ணன் பெயரில் 2.15 ஏக்கரும், பூங்காவனம் பெயரில் 2.85 ஏக்கரும் பட்டா மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து கண்ணன், அவரது மனைவி பூங்காவனத்தை நேற்று அழைத்து, நிலத்தின் உரிமைக்கான பட்டாவை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.

தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் மீட்டெடுப்போம் என்று நினைத்தும் பாராமல் ஏதிலியாக வீதியில் தவித்து நின்ற தங்களுக்கு ஆட்சியர் உதவிக் கரம் நீட்டி தங்களது வாழ்க்கையில் ஒளியேற்றியதை நம்ப முடியாமல் ஆனந்தத்தில் திக்கு முக்காடிய முதியவர்கள் இருவரும், கண்களில் நீர்பனிக்க ஆட்சியருக்கு கரங்களைக் கூப்பி நன்றி தெரிவித்தனர்.

திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி உள்ளபடியே ஒரு ரோல்மாடல் ஆட்சியர்தான்!

வாழ்த்துகள்...

ஹேட்ஸ் ஆப் யூ கலெக்டர்!

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz