மோசடி செய்வதற்காக தொப்பூரில் லாரியை எரித்ததாகப்  பத்து பேர் கைது – உடந்தையாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

Wednesday 28, November 2018, 15:38:49

கோவையிலிருந்து ஹைதராபாத்துக்கு தேங்காய் எண்ணெய் பாட்டில்களை எடுத்துச் சென்ற சரக்கு லாரி ஒன்று தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய்ப் பகுதியில் திடீர் எனத் தீப்பிடித்து எரிந்தது. தனது கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி நகர்ந்த இந்த லாரி தனக்குப்   பின்னால் வந்த வாகனங்கள் மீது மோதியது. இதனால்  மற்றொரு லாரி இரண்டு கார் என மொத்தம் நான்கு வாகனங்களுக்குமே இந்தத் தீ விபத்தில் எரிந்து நாசமாயின.

இந்த விபத்து குறித்து தர்மபுரி டிஎஸ்பி காந்தி புலன் விசாரனை மேற்கொண்டதில் லாரி உரிமையாளர் பிரபுவே காப்பீட்டுத் தொகைக்காக லாரியைத் திட்டமிட்டுத் தீ வைத்து கொளுத்தியது தெரிய வந்தது. அது மட்டுமல்லாது லாரியில் எற்றப்பட்டிருந்த தேங்காய் எண்ணெய் பாட்டில்கள் அடங்கிய 1200 பெட்டிகளில் 800 பெட்டிகளை தனியாக வேறு ஒரு லாரியில் ஏற்றிப் பதுக்கி வைத்து விட்டு அதன் பின்னர் மீதமிருந்த  400 பெட்டிகளை மட்டும் தனது லாரியோடு சேர்த்து அவர் கொளுத்தி விட்டு, மொத்த சரக்கும் தீயில் எரிந்து விட்டதாக நாடகமாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக லாரி உரிமையாளர் பிரபு, டிரைவர் சங்கரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். லாரியில் இருந்து திருடிய 800 பெட்டி தேங்காய் எண்ணெய் பாட்டில்களை சேலத்தைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவர் மூலம் மார்க்கெட்டில் விற்றதும் தெரிய வந்தது.

லாரி உரிமையாளர் பிரபுவிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் எட்டு பேரைப் போலீசார் கைது செய்தனர். இதுவரையில் இந்த வழக்கில் போலீசார் பிரபு, சங்கரன், விஜயகுமார், சேகர், மல்லமுத்து, ராஜா, ராஜ், கே.மோகன், எஸ்.மோகன், சிலம்பன் ஆகிய பத்து பேரைக் கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளனர்.

திருடப்பட்ட 800 பெட்டி தேங்காய் எண்ணெய் பாட்டில்களும் விற்பனையாகி விட்டதால் அதனை வாங்கி விற்றவர்களிடமிருந்து அதற்குண்டான தொகையாக ரூபாய் 25 இலட்சம் மீட்கப்பட்டு விட்டது. மிகக் குறைந்த காலகட்டத்தில் துப்பு துலக்கி, களவாடப்பட்ட பொருட்களுக்குண்டான தொகையினையும் மீட்டு தர்மபுரி போலீசார் சாதனை புரிந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே தொப்பூர் காவல் ஆய்வாளர் ஆனந்தவேலு தொடர்புடையவராகத் தகவல்கள் வெளியாயின. இந்த சம்பவத்துக்கு உடந்தயாக செயல்பட ஐந்து லட்சம் ரூபாய் பேரம் பேசிய ஆய்வாளர் ஆனந்தவேலு அதில் முதல் தவணையாக 50 ஆயிரம் ரூபாயை லாரி உரிமையாளர் பிரபுவிடம் பெற்றுள்ளார். இதைத் தன்னுடைய வாக்குமூலத்தில் பிரபு தெளிவாகத் தெரிவித்துள்ளார்.  பிரபுவின் ஒப்புதல் வாக்குமூலம் குறித்த வாட்ஸ்அப் வீடியோ தற்போது வாட்ஸ் ஆப்பில் லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தொப்பூர் காவல் ஆய்வாளர் ஆனந்தவேலுவை சஸ்பெண்ட் செய்து தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் இந்த வழக்கில் ஆய்வாளரும் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கைது செய்யப்படுவார்  என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz