பல்வேறுவிதமான மனமாற்றங்களை காவல்துறையினருக்கு உண்டாக்கிய நடிகர் தாமுவின் மனமேம்பாட்டுப் பயிற்சி....

Wednesday 28, November 2018, 20:06:22

ஒரு நகைச்சுவை நடிகராகவும், மிமிக்ரி கலைஞராகவும் மட்டுமே நடிகர் தாமுவை அறிந்திருந்தவர்களுக்கு கடந்த நவம்பர் 24 ஒரு வித்தியாசமான நாளாக அமைந்தது.

சென்னை அரும்பாகத்திலுள்ள DG வைஷ்ணவா கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற காவலர்களுக்கான மன மேம்பாட்டு பயிற்சி முகாமில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தாமு தன்னை வேறு ஒரு கோணத்தில் வெளிப்படுத்தி இன்ப அதிர்ச்சியினை அளித்தார் என்றே சொல்ல வேண்டும்.

சென்னைப் பெருநகரக் காவல் துறை சார்பாக அண்ணாநகர் துணை ஆணையர் சுதாகரின் மேற்பார்வையில் நடந்த மன மேம்பாட்டு பயிற்சி முகாமிற்கு சென்னை நகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமை வகிக்க, இணை ஆணையர் தினகரன் முன்னிலை வகித்தார். 

காவலர்களின் உதவியை நாடி பொதுமக்கள் வரும்போது அவர்களிடம் அன்பை வெளிப்படுத்தி நடந்து கொள்வது எப்படி? காவலர்கள் பொதுமக்களிடத்தில் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வது எப்படி?  என்பதை முக்கியமாக வைத்து நடத்தப்பட்ட இப் பயிற்சி முகாமில் மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி கலந்து கொண்டு மனோதத்துவ ரீதியாக பல ஆலோசனைகளை வழங்கினார்.

அதற்குப் பிறகு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த பிரபல மனநலப் பயிற்சியாளரும் டாக்டர் APJ.அப்துல் கலாமின் சீடருமான நடிகர் தாமு சிறப்புரை ஆற்றினார். சுமார் இரண்டரை மணி நேரம் உரையாற்றிய தாமுவின் பேச்சை திரளாகக் கூடியிருந்த 400க்கும் மேற்பட்ட காவலர்கள் கூர்ந்து கவனித்த வண்ணம் இருந்தனர்.

ஏதோ மிமிகிரி செய்யப் போகிறார், கலகலப்பாக பேசி ஜோக் அடிக்கப் போகிறார் என்று மட்டுமே நினைத்து இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்வர்களே அதிகம். ஆனால், தாமுவின் பேச்சு தங்களைச் சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்து, நெக்குருக வைத்துத தங்களுக்குள் பெரிய மனமாற்றத்துக்கு அடித்தளமிடப் போகிறது என்பதை அவர்கள் நினைத்தும் பார்க்கவில்லை.

இனி தாமு அங்கு என்ன பேசினார் என்பது அவரது வார்த்தைகளிலேயே இதோ:

“என் முன்னால் அமர்ந்திருக்கும், எங்களையெல்லாம் பாதுகாக்கும் காக்கி சட்டையில் கம்பீரமாய் தோற்றமளிக்கும்  பொதுமக்களே..... உங்கள் முன்னால் இந்த மேடையில் நிற்கும் பொதுமக்களில் ஒருவரான உங்கள் பாதுகாப்பில் வளருகின்ற நான் சில நிமிடங்கள் உங்களோடு பேசப் போகிறேன்.

எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பு காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும், அவர்கள் மனதில் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கி காவலர்களின் மனங்களை மேம்படுத்துகின்ற ஒரு சிறந்த சேவையை கொடுத்திருக்கிறார்கள். அதற்காகக் காவல்துறை உயரதிகாரிகளுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தயவு செய்து இங்கே வந்துள்ளவர்கள் யாரும் காவல் துறைப் பணியாளர்களாகத் தங்களை நினைத்துக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டாம். நீங்கள் எல்லோரும் என் ரசிகர்களாக அமர்ந்திருந்தால் நான் மிகவும் மகிழ்வேன். உங்களைப் போலீசாகப் பார்த்தால் எனக்கு ஒன்னு பயம் வருது. இல்லன்னா ஓவரா மரியாதை வருது. உங்களோடு ஜாலியா ஒரு 2 மணி நேரம் என்னுடைய மனதை மேம்படுத்திக் கொள்ள ஆசைப்படுகிறேன். எனவே, நீங்கள் எல்லோரும் என்னுடைய ரசிகர்களாக மாறி விட்டீர்கள் என்பதற்கு அடையாளமாக ஒரு சிக்னல் கொடுங்கள். (என்று தாமு சொன்னதும் கை தட்டலால் அரங்கமே அதிர்ந்தது)   

மன மேம்பாடுன்னா என்ன? அரும்பாடு பட்டு, கூப்பாடு போட்டு, பாடாய்ப்பட்டு, அவஸ்தைப்பட்டு, அதிலிருந்து விடுபட்டு வரும் கலைதான் மனமேம்பாட்டை அடையும் வித்தையா?  என் அன்புக்குரிய காவல் நண்பர்களே! மகிழ்ச்சியான மனிதனே மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். ஆக மகிழ்ச்சியான காவலர்களே பொது மக்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.

அப்படின்னா என் முன்னாடி இருக்கின்ற நீங்கள் 24 மணி நேரமும் மகிழ்ச்சியாக இருந்தால்தான் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் சேவை செய்ய முடியும். ஆனால், அப்படி ஒரு சந்தோஷமான நிலை உங்களுக்கு இருக்கா?

காவல் நிலையத்தில் தினமும் ஒருத்தர் பின்னாடி ஒருத்தராக வந்து உங்க முன்னாடி உட்கார்ந்து சோகமான தங்கள் பிரச்சனைகளை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். நீங்களும் அதை கேட்டு கேட்டு ஒரு பேப்பரில் எழுதி எழுதி ரிப்போர்ட் செய்வீர்கள். நீங்கள் பேப்பரில் மட்டும் எழுதவில்லை. உங்கள் மனதிலும் பதிக்கிறீர்கள்.

இப்படி அடுத்தவர்களின் புலம்பல்களை, துக்கத்தை தொடர்ந்து உங்கள் மனதில் பதிவிடும்போது உங்கள் மனம் மேம்பாடு அடையுமா, கூப்பாடு போடுமா? கவனமாக உங்கள் நிலைமையை உற்று நோக்கினால் மற்றவர்களின் பிரச்சினைகளும், அசுரகுணங்களும், கொடுமைகளும் உங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொள்ளும். அதில் சந்தேகமே இல்லை.

உங்களுக்குள்ளே ஒரு விரக்தியான, வெறுப்பான, கோபமான ஒரு குணம் கொண்ட காவலராவே நீங்கள் ஆக்கப்பட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பீர்கள். அந்த மனநிலைக்கு மாறிப் போய்விட்ட நீங்கள் பொதுமக்களுக்கு எப்படி இயல்பாய் சேவை செய்ய முடியும்?

 

இது மட்டுமல்லாமல் உங்களுடைய தனிப்பட்ட குடும்பப் பிரச்சனைகள், நிறைவேறாத ஆசைகள், உறவுகளிடையே சில மனஸ்தாபங்கள் சேர்ந்து உங்கள் மனதில் ஒரு அழுத்தத்தை  உருவாக்கி விடுகிறது. இந்த மனோபாவத்தில் உள்ள நீங்கள் எப்படி பிரச்னைகளோடு வரும் பொது மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும்; பாதுகாக்க முடியும்?

மனோபலம் கொண்டவர்களே, மகிழ்வான மனம் கொண்டவர்களே மற்றவர்களுக்கு உதவ முடியும் என்று சாத்தியப்படும்போது காவலர்களான நீங்கள் மகிழ்வாகத்தானே இருக்க வேண்டும். மாறாக, துக்கப்படலாமா? கவலையில் மூழ்கலாமா? தாழ்வு மனப்பான்மை கொள்ளலாமா? என்னடா இது தொழில் 24 மணி நேரமும் உழைக்கிறோம்னு சலிப்பில் சிக்கிக் கொள்ளலாமா?

உங்கள் நிலைப்பாட்டை மிகக் கவனமாகப் பாருங்கள். இறைவனின் படைத்தல், காத்தல் அழித்தல் என்ற முப்பணியில் காத்தல் எனும் பணி உங்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேர்வு செய்யப்பட்டவர்கள். மக்களின் பாதுகாப்புக்காக வரவழைக்கப் பட்டவர்கள்.அதற்காகவே பிறந்துள்ளீர்கள்.           

எனவே இந்த நிமிடத்திலிருந்து உங்களுக்குள்ளே இருந்து கொண்டு காவலர்களை துயரத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் இந்த மனதை விசாரணை செய்வோம். மனதின் விசாரணை என்று ஆரம்பித்த தாமு அரங்கில் உள்ள ஒட்டுமொத்த காவலர்களையும் தன்னுடைய நகைச்சுவைத் தோரணங்களால் வயிறு குலுங்க விலா நோக சிரிக்க வைத்து அசத்தினார்.

இறுக்கமாகவே இருந்து பழக்கப்பட்ட அத்தனை காவலர்கள் முகத்திலும் மகிழ்ச்சியான உணர்வுகள் வெளிப்பட்டன. மகிழ்ச்சியை   தொலைத்தவனிடம் மகிழ்ச்சியை தேடி வந்தால் அந்த மனிதன் எப்படியெல்லாம் பிரதிபலிப்பான் என்று தாமு நகைச்சுவையாக எடுத்துக் கூறிய விதம் தொடர்ந்து அரங்கத்தை சிரிப்பலையில் அதிர வைத்தது. இப்படி போய்க்கொண்டிருந்த சமயத்தின் அடுத்த சில நிமிடங்கள்தான் யாராலுமே நம்பமுடியாத மேஜிக் போல இருந்தது.

சற்று முன்வரை கவலைகளை மறந்தவர்களாகச் சிரித்துக் கொண்டிருந்த காவலர்கள் அனைவரின் கண்களிலிருந்தும் தாமு கண்ணீரை வரவழைத்துவிட்டார். யாருமே சற்றும் எதிர்பாராத விதமாக சிரிப்பின் உச்சியில் இருந்த அத்தனை காவலர்களையும் அவர்களின் குடும்ப சூழ்நிலைகளை உணர்த்தி, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை காவலர்களின் பயணத்தில் அவர்களுடைய பெற்றோர்களின் பங்கை, தியாகத்தை அவர் எடுத்துக் கூறிய போது அங்குக் கலங்காத கண்களே இல்லை.

மனம் உருகிப்போன காவலர்களின் இதயத்தின் ஆழத்தில் இருந்து அவர்களது மனைவியின் தியாகத்தையும், கணவனின் தியாகத்தையும் உணரச் செய்து நன்றி கூற வைத்த நிகழ்வு அனைவரையும் நெகிழச் செய்து விட்டது. இதற்கு மேடையில் அமர்ந்திருந்த தாமுவும் விதிவிலக்கல்ல; பிறரை உருகச் செய்த தாமு அதைக் கண்டு தானும் உருகிப் போய்விட்டார்.

தங்களது பாரமெல்லாம் குறைந்து போனதாகவே உணர்ந்த காவலர்களைப் பார்த்து “இனி நீங்கள் சாம்பியன் காவலர்கள்” என்று சொன்னதும் காவலர்கள் அனைவரும் கோரஸாக “ஐ ஆம் எ சாம்பியன்” என்று உரக்கக் கூறினார்கள். எல்லா காவலர்களும் சீனியர் ஜூனியர் என்று பார்க்காமல் தங்களுக்குள்ளாகக் கைகுலுக்கி அன்பு பாராட்டிக் கொண்ட அந்தக் காட்சி காண்பதற்கு உணர்வுபூர்வமான அபூர்வமான ஒரு காட்சி!

பயிற்சி முகாமில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒரு பெண் காவலர் மேடையில் பகிர்ந்து கொண்டார். “கொஞ்ச நாளா என் அம்மா அப்பாவை நான் சரியாகவே கவனித்துக் கொள்ளவில்லை என்ற குற்ற உணர்விலிருந்து இன்று நான் விடுபட்டேன். என் பெற்றோர்களின் தியாகத்தை உணர வைத்த இந்தப் பயிற்சி முகாமிற்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று உணர்வு பொங்கக் கூறினார்.

அடுத்து பேசிய ஆண் காவலர் ஒருவர் “சேவை என்றால் அது இதயத்திலிருந்து வருவது என்பதை மிகத் தெளிவாகப் புரிந்துக் கொண்டேன். இனி இந்தக் காவலனை பொதுமக்கள் தங்களின் சொந்த சகோதரனாகவேப் பார்ப்பார்கள்” என்று கூறினார். பயிற்சியின் இறுதியில் அனைவருக்கும் அண்ணா நகர் துணை ஆணையர் நன்றி கூறினார்.

தேசிய கீதத்துடன் மனமேம்பாட்டுப் பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.

மன இறுக்கங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, மனம் விட்டுச் சிரித்து இலேசாகி, அதன்பின் கடமையுணர்வுடன் தங்கள் பொறுப்புகளை உணர்ந்தவர்களாக மாறி, உறவுகளின் தியாகங்களை நினைத்து உணர்வுவயப்பட்டவர்களாக மனம் உருகி நன்றி கூறி பல்வேறுபட்ட மனமாற்றங்கள் தந்த நிறைவுடன் காவலர்கள் கலைந்து சென்ற காட்சி மனதை விட்டு அகல வெகு நேரமாயிற்று.

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz