திருச்சி பெண் தலைமைக் காவலர் செல்வராணி தி.மு.க.வுக்காக செய்த தியாகம்தான் என்ன? குமுறும் திருச்சி தி.மு.க.வினர்

Friday 07, December 2018, 00:28:25

திருச்சி மாநகரக் காவல்ஆணையரின் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் முகநூல் பிரிவில்  தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவர் செல்வராணி இராமச்சந்திரன். திருச்சி மாநகரம் பொன்மலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தைச் சேர்ந்த இவர் அயல்பணியாக ஆணையரின் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். 

தமிழ் மீது ஆர்வமுடையவராகக் கூறிக் கொள்ளும் செல்வராணி கவிதைகள் எழுத முயற்சி செய்து வந்தவர். இதன் காரணமாகத் தலைமைக் காவலர் செல்வராணி, கவிசெல்வா என்ற புனைபெயரில் கவிதை படைக்க முயற்சித்து வந்தார். சில சமயங்களில் அறிமுகப் பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் போன்ற இலக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தன்னை ஒரு இலக்கியவாதியாகவும் காட்டிக் கொள்ள முனைந்தார்.

மறைந்த தி.மு.க. தலைவரும், முத்தமிழறிஞருமான கருணாநிதியின் பேச்சாற்றல், எழுத்தாற்றல் மீது பற்றுகொண்டிருந்த செல்வராணி, அவரது மறைவுக்கு இரங்கற்பா என்று ஒன்றினை எழுதி அதனைப் படித்து  வீடியோவாகப் பதிவு செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்டார். இதற்காக அவரிடம் குறிப்பாணையை அனுப்பி  திருச்சி மாநகர நுண்ணறிவுப் பிரிவின் ஆய்வாளர் விளக்கம் கேட்டு இருந்தார். 

ஆனால் செல்வராணி அளித்த விளக்கம் திருப்தி அளிப்பதாக இல்லாத காரணத்தால் திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையாளர் அமல்ராஜ் செல்வராணியை நுண்ணறிவுப் பிரிவில் இருந்து மத்திய மண்டல காவல்துறைக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். வேறு பணியிடத்துக்குச் செல்ல விரும்பாத செல்வராணி, கடந்த நவம்பர் 30-ம் தேதியோடு காவல்துறைப் பணியில் இருந்து தன்னை விருப்ப ஓய்வில் விடுவித்துக் கொண்டார்.

தனது குடும்பத்தை விட்டு வேறு ஊருக்கு வேலைக்குச் செல்ல மறுத்து செல்வராணி விருப்ப ஒய்வு பெற்றதை மறைத்து அவருக்கு வேண்டிய சிலர், கருணாநிதிக்கு இரங்கல் கவிதை எழுதினர் என்பதற்காக செல்வராணியைப் பணியிடை நீக்கம் செய்ததாகவும், அதனை ஏற்க மறுத்த அவர் தன்னுடைய வேலையையே ராஜினாமா செய்துவிட்டதாகவும் திரித்து சமூக ஊடகங்களில் செய்தியைப் பரவ விட்டனர்.

இந்தத் தகவல் எந்த அளவுக்கு சரியானது என்பதைக் கூட யோசியாத பலரும் அதனை உண்மை என்றே நம்பி வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக்கில் அதனை அப்படியே பார்வர்ட் செய்யத் தொடங்கினர். இதன் காரணமாக கலைஞர் புகழ் பாடி, அதற்காகத் தன் அரசாங்க வேலையையேத் துச்சமெனத்  தூக்கி எறிந்த வீராங்கனை என்ற அளவில் செல்வராணி 'பில்ட்அப்' செய்யப்பட்டு பேசப்பட்டார்.

இந்த நிலையில் செல்வராணியின் இந்தத் ‘தியாகம்’(??) திமுகவின் இணையதள செயற்பாட்டாளர்கள் மூலம் நேற்று திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டு போகப்பட்டது. தலைமைக் காவலர் செல்வராணி பற்றித் தன்னிடம் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மை என நம்பிய ஸ்டாலின் செல்வராணியை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல முற்பட்டார். தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திருச்சி விமான நிலையம் வரும் வழியில் கே.கே.நகரில் உள்ள செல்வராணியின் இல்லத்திற்கு நேற்று இரவு 10 மணிக்கு நேரில் சென்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், செல்வராணியைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.   

இப்படி ஒரு வாய்ப்பினை எதிர்பார்த்துக் காத்திருந்த செல்வராணி அதனைத் தவற விடுவாரா என்ன? தனது சுய புராணத்துடன் காவல்துறையில் தனக்கு வழங்கப்பட்ட மெமோ மற்றும் விருப்ப ஓய்வு சான்றிதழ்களை ஸ்டாலினிடம் காட்டி, தான் காவல்துறையால் பழிவாங்கப்பட்டிருப்பதாகக் கூறி, இனி காவல்துறையில் தான் இருந்து என்ன பயன் என்று தனது வேலையினையே ராஜினாமா செய்து விட்டதாகவும்  கூறியுள்ளார். இதனைக் கேட்டு நெகிழ்ந்த ஸ்டாலின் ‘இனி உனக்கு அண்ணனாக நானிருப்பேன் கவலை வேண்டாம்’ என ஆறுதல் கூறிச் சென்றுள்ளார்.

தலைமைக் காவலர் செல்வராணி தி.மு.கவுக்காக எந்தவொரு போராட்டத்தையும் சந்திக்காதவர், தியாகத்தையும் செய்திராதவர். தி.மு.க.விற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களுடைய குடும்பத்தினருக்குக் கூடக் கிடைக்காத ஒரு  முக்கியத்துவம் செல்வராணிக்குத் தரப்பட்டதையும், அவரது இல்லத்துக்கே சென்று, அவரைத் தங்கள் தலைவர் ஆற்றுப்படுத்தியதையும் ஏற்க முடியாமல் புழுக்கமடைந்திருக்கின்றனர் திருச்சி தி.மு.க.வினர். 

குறைந்த பட்சம் கட்சியில் உறுப்பினராகக் கூட இல்லாமல் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து, பணியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக  விருப்ப ஒய்வினைப் பெற்ற ஒரு பெண்மணிக்கு முக்கியத்துவம் தந்து ஆறுதல் சொல்ல அவரது இல்லத்துக்கு மாபெரும் கட்சி ஒன்றின் தலைவர் சென்றது சரியல்ல; தவறானத் தகவலைத் தந்து தலைவரை யாரோ தவறாக வழி நடத்தி இப்படியெல்லாம் ஆட்டுவிப்பது வேதனைக்குரியது என்று முகம் சுழித்தபடி புலம்புகின்றனர் திருச்சி திமுகவினர்.

திமுக இலக்கிய அணியினைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் இது பற்றிக் கூறும்போது செல்வராணியை பிடிபிடி எனப் பிடித்தார்.

“கலைஞருக்கான இரங்கற்பா என்று ஏட்டம்மா எழுதி வாசித்திருப்பத்தை நானும் இணையதளம் வழி கண்டேன். தமிழ் அறிந்த யாரும் அதனை கவிதை என்றே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்த அம்மா கீழ்க்காணும் இந்த வரிகளையே இறங்கற்பாவாக எழுதி இருக்கிறார். நீங்களே படித்து அது கவிதையா இல்லையா என்ற முடிவுக்கு வாருங்கள்....

இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் மன்னர் வடிவேலுவுக்கு முன்பாக கவிஞர் ஒருவர் பாடும் மாமா மன்னா கவிதையைக் காட்டிலும் இது கொடுமையானது.

தமிழ் பேசிய என் தமிழா!

என் தமிழே! என் உயிரே!! என் தங்கமே!!!

தாங்க முடியாமல் தவிக்கிறது மனது

அரசியல் பிழைத்தாய் நீ....

அதற்காக நான் அழவில்லை

அரசியல் அறியாதவள் நான் – ஆனால்

உன் ஆணவத் தமிழ் அறிந்திருக்கிறேன்

எப்படியப்பா போனது உன் உயிர்?

இனி என் தமிழைத் தாங்கிப் பிடிக்கத்

தரணியில் மூத்தவன் இல்லையே அப்பா!

செம்மொழி தந்து தமிழை செழிப்பாய் வளர்க்க

இனி உன் இடத்தைப் பூர்த்தி செய்ய

உலகத்தில் ஒருவருமே

இல்லையே அப்பா கலைஞன்

சிலபதிகாரத்தையே (சிலப்பதிகாரம் அல்ல)

நாடகக் காப்பியம் ஆக்கினாயே அப்பா

கண்ணகியாய்க் கதறுகிறேன்

என் கண்ணீர் துடைக்க வருவாயா அப்பா?

நீ வயதானதால் இறந்தாயா?

எத்தனை வயதானாலும்

எனக்கும் என் தமிழுக்கும் நீ

தலைவன் தானே!

என் தமிழுக்குத் தகப்பன்தானே அப்பா நீ?

நான் ஒரு மதுக் கலயம்; என்பால் வீழ்ந்த ஈக்கள்

எழுந்ததே இல்லை என்று எழுதினாயே நீ

இதில் ‘அரசியல் பிழைத்தாய் நீ அதற்காக நான் அழவில்லை’ என்று வரும் வரிகள், கலைஞரைப் பார்த்து, அரசியலில் நீ  தவறிழைத்தாய்; அதற்காக நான் அழவில்லை என்று இந்த அம்மையார் சொல்வது கலைஞரை சிறுமைப்படுத்துவதைப் போன்ற விபரீதப் பொருளுணர்த்துகின்றன. இந்த வரிகளை ஒப்புக் கொண்டுதான் ஸ்டாலின் செல்வராணிக்கு ஆறுதல் சொல்ல வந்தாரா?

அடுத்த சில வரிகளில் ‘உன் ஆணவத் தமிழ் அறிந்திருக்கிறேன்’ என்று குறிப்பிடுகிறார். தலைவருடையது ஆணவத் தமிழ் என்று எதிர்க்கட்சியினர் கூடச் சொன்னதில்ல்லை. இந்த வார்த்தைப் பிரயோகத்தைத் தளபதி ஏற்கிறாரா?

எத்தனை வயதானாலும்

எனக்கும் என் தமிழுக்கும் நீ

தலைவன் தானே!

என் தமிழுக்குத் தகப்பன்தானே அப்பா நீ?

நான் ஒரு மதுக் கலயம்; என்பால் வீழ்ந்த ஈக்கள்

எழுந்ததே இல்லை என்று எழுதினாயே நீ

கவிதை என்று ஒரு கத்துக்குட்டி எழுதியுள்ள இந்த வரிகளை எப்படிப் படித்தாலும் ஆபாசமாகவேத் தெரிகிறது. இதை நம் தலைவர் சரியென்று ஒப்புக் கொள்கிறாரா என்ன? தலைவர் ஸ்டாலின் முன்பாக தன்னுடைய 'இரங்கற்பா'(?)வை வாசித்துக் காட்டிய செல்வராணி அரசியல் பிழைத்தாய் நீ, ஆணவத் தமிழ் போன்ற சர்ச்சைக்குரிய வாக்கியங்களை தவிர்த்தே படித்தார். இதன் மூலம் சாமர்த்தியமாகத் தலைவரை அவர் ஏமாற்றியுள்ளார்." என்று கோபத்துடன் கொட்டித் தீர்த்தார் அந்த நண்பர்.

காவல்துறையில் உளவுப் பிரிவில் வேலைபார்க்கும் உயரதிகாரி ஒருவரிடம் செல்வராணி விவகாரம் குறித்துக் கேட்டோம். “செல்வராணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறுவது அப்பட்டமான பொய். அவர் விருப்ப ஓய்வினையே பெற்றுள்ளார். காவல்துறையின் பணியாளர் நடத்தை விதிகள்படி காவல்துறைப் பணியினைத் தவிர்த்த வேறு வேலைகளைச் செய்வது தவறு. அதே போல எந்தக் கட்சியினையும் ஆதரித்துப் பேசுவதும், பிரச்சாரம் செய்வதும் தவறு.

இறந்தத் தலைவருக்கு இரங்கற்பா என்றால் கூட அந்தக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடு என்றே அது எடுத்துக் கொள்ளப்படும். அப்படி செய்பவர்களுக்கு சார்ஜ் மெமோ தரப்படும்; பணியிட மாற்றம் செய்யப்படலாம். அவர்களை சஸ்பென்ட் செய்வது இல்லை. திலகவதி மேடம் போன்றவர்கள் இலக்கிய மேடைகளில் பங்கேற்றனர் என்றால் அரசுக்குத் தெரிவித்து அதற்கான சிறப்பு அனுமதியினை அவர்கள் பெற்றிருந்தனர்” என்ற அவர் விளக்கம் தந்தார்.

எது எப்படியோ தவறான ஒரு விஷயத்தை சரியானதாக தலைவர் அங்கீகாரம் செய்வது ஏற்புடையதல்ல; உண்மை நிலை தலைவருக்குச் சென்று சேர்ந்தால் சரிதான் என்று ஆதங்கத்துடன் திருச்சி திமுகவினர் கூறுகின்றனர்.  

  • க.சண்முக வடிவேல்
© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz