மேகதாது அணை தடை விதிக்க தமிழக அரசு விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

Thursday 13, December 2018, 19:31:19

 

மேகதாதுவில் புதிய  அணை கட்டும் கர்நாடக அரசின் திட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் வழங்கியுள்ள அனுமதிக்கு தடை விதிக்கும்படி தமிழக அரசு விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. மேலும், தமிழக அரசின் மனுவுக்கு 4 வாரத்தில் பதிலளிக்கும்படி மத்திய அரசு, நீர்வள ஆணையம், கர்நாடகா அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கான ஆரம்பகட்ட ஆய்வு நடத்த அனுமதிக்கும்படி மத்திய நீர்வளத்துறை  ஆணையத்திடம் அது விண்ணப்பித்தது.

இத்திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இருப்பினும், இந்த அணை தொடர்பான செயல் திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத் துறை ஆணையத்திடம் கர்நாடக அரசு இரு மாதங்களுக்கு முன் தாக்கல் செய்தது. அணை கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், அதற்கான திட்ட மதிப்பீடு, பலன்கள் போன்ற தகவல்கள் இதில் அடங்கியுள்ளன. இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதன் அடுத்தக் கட்டமாக மேகதாது பகுதியில் கர்நாடகா நீர்வளத் துறையினர் சில தினங்களுக்கு முன் ஆய்வும் நடத்தி முடித்தனர்.

கர்நாடகாவின் வரைவு திட்டத்துக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தையும் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. இந்நிலையில், கர்நாடகாவுக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் வழங்கியுள்ள அனுமதிக்கு தடை விதிக்கக் கோரி கடந்த மாதம் 30ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

அதில், ‘காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவித புதிய அணைகள் கட்டுவதற்கு, தமிழகம், கர்நாடகா, புதுவை மற்றும் கேரளா ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தால் மட்டுமே இதில் இறுதி முடிவை எடுக்க முடியும். அதனால், கர்நாடகாவுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் செயல், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அவமதிக்கும் விதமாக உள்ளது. எனவே, மேகதாதுவில் அணை கட்டும் வரைவு திட்டத்துக்கு வழங்கியுள்ள ஒப்புதலுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், அணை கட்டும் திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து விதமான அனுமதிகளையும் ரத்து செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

மேலும், இந்த அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்பட்ட கர்நாடக அரசு, அதன் அதிகாரிகள், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் காவிரி ஆணைய தலைவர் உட்பட 5 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படியும் தமிழக அரசு மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. அதோடு, ஒருதலைபட்சமாக செயல்படும் மத்திய நீர்வள ஆணையம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகிய இரண்டிற்கும் தலைவராக பதவி வகிக்கும் மசூத் உசேனை மாற்றி விட்டு, காவிரி ஆணையத்திற்கு என நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என மற்றொரு மனுவையும் கடந்த வாரம் தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏஎம்.கன்வில்கர், அஜய் ரஸ்தோகி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே,  “மேகதாதுவில் அணை கட்டும் வரைவு திட்டத்துக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. இந்த அணையை கட்டினால் அது தமிழகத்திற்கு மிகப்பெரிய கேடாக அமையும். மேலும், காவிரி ஆணையத்துக்கு என தனியாக நிரந்தர தலைவரை நியமிக்க உத்தரவிட வேண்டும்’’ என வாதிட்டார்.

கர்நாடகா அரசு வழக்கறிஞர் உதய் பெல்லா வாதிடுகையில், ‘‘மேகதாதுவில் அணை கட்டுவது, கர்நாடக அரசின் குடிநீர் திட்டமாகும். அது குறித்த முதற்கட்ட வரைவிற்குதான் மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இது இறுதியானது கிடையாது. இந்த ஒப்புதல் குறித்து தமிழக அரசுக்கும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கும் அனுமதியின் நகல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘மேகதாது அணை திட்டத்துக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கி இருப்பது ஆரம்ப கட்டம்தானே தவிர, அணை கட்டுவதற்கான இறுதி அனுமதி கிடையாது. அதனால், அந்த ஒப்புதலுக்குத்  தடை விதிக்க முடியாது. அதற்கான அவசியமும் இப்போது கிடையாது.

இருப்பினும், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவிற்கு மத்திய அரசு, மத்திய நீர்வள ஆணையம், கர்நாடகா அரசு மற்றும் காவிரீ நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவை 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் புதுவை மாநிலம் தாக்கல் செய்துள்ள மனுவும் இணைத்து விசாரிக்கப்படும். மேலும், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மட்டும் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மேகதாதுவில் அணை கட்டும் முன்னபாக, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை கண்டிப்பாக பெற வேண்டும்’’ என தெரிவித்தனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz