அஞ்சலி செலுத்த வந்த மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்மம்...

Monday 13, August 2018, 13:18:51

மனம் வலிக்கும்படி கலைஞர் மறைந்த அன்று துவங்கி நேற்று மாலை வரை எத்தனை சம்பவங்கள்?

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்தபோது இதே ராஜாஜி ஹாலில் கூட்டம் அலைமோதியது. ஆனால் பார்க்க வந்த தொண்டர்கள் மீது தடியடி நடக்கவில்லை. பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு எந்த நெரிசலும் நிகழவில்லை.

கடைசி நேரத்தில் நெரிசல் இருந்தபோதும் அது சாமர்த்தியமாகச் சமாளிக்கப்பட்டதை நேரடி அனுபவத்தில் அங்கிருந்த தருணத்தில் உணர்ந்திருக்கிறேன்.

அதற்கு நேர் எதிராக இருந்தது ராஜாஜி அரங்கில் நேற்று ( 8.8. 2018) நேரடியாகப் பார்த்த அனுபவங்கள்.

உடன்பிறப்புகளே என்று அன்புடன் கலைஞரால் அழைக்கப்பட்ட தொண்டர்கள் பட்ட சிரமங்கள் அதிகம். சென்னைக்கு வரும் வாகனங்களைக் கட்டுப்படுத்தினார்கள். பெட்ரோல் பங்குகளை மூடினார்கள். காவல்துறையோடு மற்ற சிறப்புப் பிரிவினரையும் சில நிறச் சீருடைகளில் வரவழைத்திருந்தார்கள்.

அதிகாலை துவங்கி ராஜாஜி ஹாலுக்குள் கலைஞரின் உடலைப் பார்க்க யத்தனித்த தொண்டர்கள் பலதரப்பட்ட நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.

பொதுமக்கள் நுழைவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த வாசலில் காலையிலிருந்தே கூட்டத்தினர் திணறிப் போனார்கள். சிலர் மயக்கமானார்கள். சில தடவைகள் தடியடி நடத்தப்பட்டது. எங்கிருந்தோ தங்கள் தலைவரைக் கடைசி முறை பார்க்க வந்த தொண்டர்கள் மீது கடுமையான வன்மம் கீழிறங்கியதைப் போலிருந்தது.

முக்கியப்பிரமுகர்கள் நுழைவதற்கு வேறொரு வாசல். அதற்கு முன்னாலும் திரளான காவல்.அங்கும் கூட்டம். திரைத்துறையில் அறிமுகமான முகங்கள் மட்டுமே நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டன.

தி.மு.க.வில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்களே தடுத்து நிறுத்தப்பட்டார்கள். கலைஞரின் உதவியாளர் ஒருவரே விவாதத்திற்குப் பிறகே அனுமதிக்கப்பட்டார். இயக்குநர் டி.ராஜேந்தர் கடுமையாகச் சத்தம் போட்டு கத்திய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டார்.

பலர் தள்ளிவிடப்பட்டுக் காயம் அடைந்தார்கள். சிலருடைய தலையில் காயம்பட்டு ரத்தம் ஒழுகியது. சிலர் மிதிபட்டார்கள். இதை இருமுறை நேரடியாகப் பார்த்தபோது தொண்டர்கள் மீதும், ஆதரவாளர்கள் மீதும் இவ்வளவு தூரத்திற்கு வன்முறை கட்டவிழ்த்துவிட்டிருக்க வேண்டுமா என்கிற பதற்றம் பார்த்துக் கொண்டிருந்தவர்களைத் தொற்றியது.

முரட்டுச் சீருடைகளுக்கு முன்னால் ஒரு ஊமையான தி.மு.க. தொண்டர் மீது பாய்ந்த வன்முறை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கீச்சுக்குரலில் அவர் அழுத அழுகை சுற்றுப்புறத்தைக் கண்கலங்க வைத்தது.

அடுத்தடுத்து நடந்த தாக்குதலிலும், நெரிசலிலும் சிக்கி ஒரு பெண் உயிரிழந்ததை ஒரு தொலைக்காட்சி மட்டுமே ஒளிபரப்பியது.

பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னணியில் நான்கு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். மரணத்தைப் பார்க்க வந்தவர்கள் மீது வலி நிறைந்த மரணம் திணிக்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்புக்காக இப்படிச் செய்தோம் என்று தாக்கியவர்கள் தரப்பில் நியாயப்படுத்தலாம்.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மீது பாய்ச்சப்பட்ட அதிகார வன்முறையையும், உயிர்ப்பலிகளையும் எப்படி நியாயப்படுத்த முடியும்? யாருடைய வன்மம் பீறிட்டு இப்படி மக்கள் திரள் மீது சிதறியிருக்கிறது?

நேரில் பார்த்தபோது தாக்குதலுக்கு பயந்து சிதறி நெரிசலில் ஓட முடியாமல் தளர்ந்து நடந்து கொண்டிருந்த வயது முதிர்ந்த தி.மு.க தொண்டர் வீறிட்டு இப்படிக் கத்தியதைச் சுலபமாக மறக்க முடியவில்லை.

‘’ மறுபடியும் எமர்ஜென்சியைக் கண்ணிலே காட்டுறீங்களேய்யா..’’

 

   நன்றி: திரு. மணா, மூத்த பத்திரிகையாளர் 

 

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz