மலேசியா: ஏழை மாணவரது பெற்றோரின் நிதிச்  சுமையைக் குறைக்க நடத்தப்பட்ட 'பேக் டூ ஸ்கூல் -2019' - விழா

Thursday 27, December 2018, 15:13:23

மலேசியாவில் பள்ளி விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் மாணவர்கள் பள்ளி செல்ல தயாராகிவருகின்றனர். பள்ளி செல்லும் ஏழை மாணவ, மாணவியரின் பெற்றோரது பொருளாதாரச்  சுமையைக் குறைக்கும் விதமாக 'பேக் டூ ஸ்கூல் - BAcKto ScHoOl 2019' - விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

மலேசியாவியில் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சி வாயிலாக மாலிக் ஸ்ட்ரீம் கார்பொரேஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் 'பேக் டூ ஸ்கூல் - BAcKto ScHoOl 2019' - விழா கோலாலம்பூரில் உள்ள ஜலான் துன்கு அப்துல் ரஹ்மான் பகுதியில் சரஹ ஹுகஸ் @ குளோப் மாலில் கடந்த டிசம்பர் 22ம் தேதி நடைபெற்றது.

காலை 9 மணிக்குத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த விழாவுக்கு மாணவ மாணவியர் தமது பெற்றோருடன் காலை 8.30 மணி முதலே ஆர்வத்துடன் வரத் தொடங்கினர். தங்களது பதிவை உறுதி செய்துகொண்ட மாணவர்கள்  தங்களுக்கான அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொண்டனர்.

காலை 9 மணிமுதல் மதியம் 12 மணி வரை மாணவர்கள் தங்களின் பெற்றோரது உதவியுடன் தங்களுக்கு தேவையான பள்ளிச் சீருடைகள் ஷூ மற்றும் சாக்ஸ் போன்றவற்றைத் தேவைப்படும் அளவு சரியான நிறத்தில் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.

மாலிக் ஸ்ட்ரீம் கார்பொரேஷன் நிறுவனம் மலேசியாவை தலைமை இடமாகக் கொண்டு மலேசிய இந்தியர் டத்தோ அப்துல் மாலிக் தலைமையில் இயங்கி வருகிறது. வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, பண பரிமாற்று சேவை, சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகம் மற்றும் பல்வேறு துறைகளில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந் நிறுவனம் ஏழைகளுக்கு என ஒவ்வொரு பண்டிகைகள் மற்றும் விசேஷ காலங்களில் பல ஆயிரம் ரிங்கிட் பணத்தினைச் செலவிட்டு வருகிறது. 

இந்த ஆண்டு புதிய முயற்சியாக, ஏழைகளின் சுமையைக் குறைப்பதன் நோக்கமாக பள்ளிக் குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, வாட்ஸ் ஆப் செயலி மூலம் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

விண்ணப்பித்தவர்களில் தகுதி உடைய 151 பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கபட்டனர். அவர்களுக்குப் பள்ளி செல்லத் தேவையான பள்ளிச் சீருடைகள், ஷூ மற்றும் சாக்ஸ், பள்ளிப் புத்தகப் பை என மொத்தம் 50,000 மலேசிய ரிங்கிட் மதிப்புள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அனைவர்க்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

விழாவில் காலை 12 மணியளவில் டத்தோ அப்துல் மாலிக் கலந்து கொண்டு உரையாற்றினார், ஏழை மாணவ மாணவியருக்கு கல்விக்காக உதவி செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார், பயனாளிகளுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு உதவிகளை வழங்கினார். ஊனமுற்ற சில மாணவர்களுக்கான உதவியினை அவர் தரையில் அமர்ந்து கொண்டு வழங்கியது காண நெகிழ்ச்சியாக இருந்தது. 

இந்த விழாவில் மாணவ மாணவியர்களின் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறக்க மற்றும் சிறந்த வெற்றிபெற வாழ்த்துவதாகவும். தான் எப்போதும் பள்ளி மாணவர்களுக்கு ஆதரவு தருவதாகவும் டத்தோ அப்துல் மாலிக் தெரிவித்தார்.

விழாவின் நிறைவாக அணைத்து மாணவ மாணவியருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். டத்தோ அப்துல் மாலிக்கின் இது போன்ற மனித நேயமுள்ள முயற்சிகளுக்கு மாணவ மாணவியர்களுக்கு  நன்றி தெரிவித்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு விழா நிறைவு பெற்றது.  

கடந்த பிப்ரவரி மாதம்  மலேசியா, செர்டாங் பகுதியில் அமைந்துள்ள SJKT F.E.S தமிழ்ப் பள்ளியில் நடந்த ஒற்றுமைப் பொங்கல் விழா விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட டத்தோ அப்துல் மாலிக், தமிழ்ப் பள்ளியின் வளர்ச்சிக்காகப் பத்தாயிரம் மலேசிய ரிங்கிட் நிதியுதவியை பள்ளித் தலைமை ஆசிரியர் பிஜேயால்செமி சாமிதுரையிடம் வழங்கியதை இந்த விழாவுக்கு வந்திருந்த மாணவர்களில் சிலர் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.

பள்ளி மாணவர்களுக்கு செய்யும் இந்த உதவியைப் போலவே மாலிக் ஸ்ட்ரீம் கார்பொரேஷன் நிறுவனம் அனாதைகள், கணவரின்றி குடும்பத்தைத் தனியாக வழி நடத்தும் பெண்கள், ஊனமுற்றோர், ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு பணம், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் போன்ற உதவிகளுடன் ஒவ்வொரு ஆண்டும் 3000 முஸ்லிம்களின் புனித பயணத்திற்கு உதவி புரிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

- மலேஷியாவிலிருந்து  வெங்கடேசன்

 

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz