திருவாரூர் இடைத்தேர்தலில் அமோகமான வெற்றி தி.மு.க.வுக்குக் கிடைக்கும் - முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் அறிக்கை

Wednesday 02, January 2019, 12:11:12

திருவாரூர் இடைத் தேர்தல் கலைஞரின் சாதனைக்கு நன்றி செலுத்தும் அமோக வெற்றியாக அமையும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புத்தாண்டுச் செய்தியாக திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது மிகுந்த வரவேற்புக்குரியதாகும்.

2019ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் ஏற்றத்திற்கும், இன்றைய தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையின் வெற்றிக்கும் வரவேற்பு கூறும் ஆண்டு என்பதில் எந்த ஐயமுமில்லை.

டாக்டர் கலைஞர் அவர்கள் பிறந்து, வாழ்ந்து , சிறந்து இருமுறை இந்தத் தொகுதியில் வென்று, புகழ் உச்சியில் நின்று உலகத் தலைவர்கள் பட்டியலில் உச்ச நிலையைத் தொட்டவர் என்னும் பெருமைக்குரியவர் டாக்டர் கலைஞர். அவரது தொகுதியில் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற இடைத் தேர்தலில் டாக்டர் கலைஞரின் புகழுக்கு மேலும் பெருமையையும், புகழையும் சேர்க்கும் வகையில் உதயசூரியன் வெற்றியைப் பெரும்.

புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கலைஞரின் நல்லாட்சி மீண்டு மலர்ந்திட திருவாருர் இடைத் தேர்தல் வழிகாட்டும். இந்தத் தேர்தலில் டாக்டர் கலைஞர் அவர்களின் பிரதிநிதியாகப் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கு எல்லா சமுதாய மக்களும் இதயப்பூர்வமாக வாழ்த்துக் கூறி, டாக்டர் கலைஞர் அவர்களின் சாதனைக்கு நன்றி செலுத்தும் விதமாக அமோகமான வெற்றியை அளிப்பார்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றிக்கு எல்லா வகையிலும் உழைத்து பாடுபடும். இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் உதயசூரியன் வெற்றிக்கு ஓயாமல் உழைத்து தேர்தல் பணி துவங்கி வெற்றிக் கனியை பறிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz