நெல்லை திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் – ஒரு சிறப்புப் பார்வை

Saturday 05, January 2019, 18:21:49

திருநெல்வேலியில் இருந்து 45 கிலோமீட்டர், கன்னியாக்குமரியில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற ஒரு சிறிய ஊர்தான் திருக்குறுங்குடி. முழுக்க முழுக்க விவசாயம்தான் ஊரின் பிரதான தொழில். ஊரைச் சுற்றிலும் நெல் வயலும், வாழைத்தோப்பும் தான் காட்சியளிக்கின்றன.

 கொடுமுடியாறு அணையுடன் ஆறு, குளம், கால்வாய் போன்றவை சேர்ந்து கொள்ள திருக்குறுங்குடி பசுமையாய்க் காட்சி தருகிறது. திருக்குறுங்குடியின் நல்ல அகலமான தெருக்களுக்கு நடுவில் "அழகிய நம்பிராயர் கோவில்" அமைந்துள்ளது. ஊருக்கு நடுவே அந்த காலத்திலே 6 அடி உயரத்திற்கு மண் இட்டு இந்தக் கோவிலை எழுப்பியிருக்கிறார்கள்.

கோவில் முழுக்க கல்தூண்கள், கற்கள் கொண்டு எழுப்பப் பட்டதால், எவ்வளவு வெயில் அடித்தாலும் கோவில் உள்ளே குளுமையாகவும், நல்ல காற்றோட்டத்துடன் இருக்கிறது.

30 அடி உயர மதில்சுவர், தெப்பகுளம், கோவில் உள்ளே 20 அடி ஆழத்தில் நீர் ததும்பும் கிணறு என மிகப்பெரும் உள்கட்டமைப்புடன் மிகவும் வசதியுடன் அழகிய நம்பிராயர் கோவில் வடிமைக்கப்பட்டுள்ளது.

கோவில் என்பது மதத்தை பற்றி மட்டும் சொல்லாமல் அந்தக் கால மக்களின் திறமை பண்பாடு, அறிவியல், உறவுமுறை, வாழ்வியல் என பல விஷயங்களை அந்தக் கோவில் சிற்பங்கள் பேசுகின்றன.

இங்குக் கடவுளர்கள் சிலைகளை விட சாதாரண குடிமக்கள் சிற்பங்கள்தான் அதிகம் காணப்படுகின்றன. குறவப்பெண், அரக்கன், முனிவர், போர்வீரன், பணிப்பெண் எனக் காணப்படும் சிற்பங்கள் சரித்திரத்தைச் சொல்கின்றன.

 மனிதர்கள் மட்டுமின்றி யானை, சிங்கம், யாளி, குதிரை, பாம்பு, ஒட்டடகம், குரங்கு, ஆமை, மயில்,  அன்னம், கிளி என பறவை பட்சிக்கும் சிற்பங்கள் உள்ளன.

குதிரையின் மூக்கனாங்கயிறு, மனிதகால் நகம்,  கால்நரம்புகள்,  தலைமுடி என தத்ரூபமாய் இருக்கிறது. ஒவ்வொரு சிலைகளும் 7 அடி உயரத்தில் அதிசயிக்க வைக்கிறது. அந் நாளைய அணிகலன், ஆபரணம், கூடைகள் என வரலாறு சொல்லி செல்கிறது.

கால் தண்டை, வில்அம்பு என தொட்டு பார்க்கும்போதே அதன் உயிர்பை உணரலாம். பாகுபலி கிராபிக்ஸ் பார்த்து வாய்பிளந்த நாம் இதுபோன்ற உண்மையான பிரமாண்டத்தின் அருமை உணர்வதில்லை..

ஒவ்வொரு சிற்பத்தின் பிண்ணனியிலும் சில கதைகளும் பல விஞ்ஞான உண்மைகளும் ஒளிந்திருக்கின்றன. இப்போதுள்ள அரசு நிர்வாகம் போல் அல்லாமல், அந்நாளைய ஆலய பணிகளை மன்னனும் மக்களும் செய்வேனே செய்ததால்தான், இத்தனை ஆயிரம் ஆண்டுக்குப் பின்னும் கம்பீரமாய் நிற்கிறது.

கோவிலின் வயது 5000 ஆண்டு என்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழனின் சிற்ப்பக்கலையும், விஞ்ஞான அறிவும் மெய்சிலிர்க்க வைக்கிறது. கோவில் கோபுரத்திலும் சிற்பங்களுக்குப் பஞ்சமில்லை.

எத்தனை மன்னாதி மன்னன், அறிஞன், ஞானி, சித்தர்கள் என பல ஆயிரம் தலைமுறையை பார்த்து கொண்டு இன்றும் நிற்கிறது. வாழ்ந்தவன், தாழ்ந்தவன் அழிந்தவன் என இன்று நம்மையும் பார்த்துக் கொண்டு இருக்கிறது.

இந்தக் காலத்திலும் நம் பக்கத்தில் இருக்கும் இது போன்ற பொக்கிஷங்கள் பெருமைகள் அடுத்த சந்ததியினராலும் உணரப்பட வேண்டியவை. இது மாதிரியான பழமை வாய்ந்த கோவில்கள் எல்லாம் நம் நாட்டின் ஒளிகுன்றா செல்வங்களாக மதிக்கப்பட வேண்டியவை.

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz