மோடியின் ஆட்சியிலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் – காங்கிரஸ் கிளப்பும் புதிய புகார்!

Wednesday 16, January 2019, 21:01:25

தற்போது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியிலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.69 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் புகார் கூறியுள்ளது.

இதுபற்றி அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி சமீபத்தில் பேசுகையில், தனது ஆட்சிக்கு எதிராக எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் கிடையாது என்றார். ஆனால் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பா.ஜனதா ஆட்சியில் தேசிய அளவில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. இதை மீறும் வகையில், மோடி அரசாங்கம் முதலில் வருபவருக்கு முதல் ஒதுக்கீடு என்ற வகையில் தனியார் நிறுவனத்துக்கு மைக்ரோவேவ் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரு.560 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல் இதற்கு முன் நடைபெற்ற ஒதுக்கீட்டில் தனியார் செல்போன் நிறுவனங்கள் பயன் அடையும் வகையில் செயல்பட்டதால் பொதுமக்கள் பணம் ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலத் தொகை வசூலிப்பது 6 ஆண்டுகளாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்ததால் அரசுக்கு ரூ.23 ஆயிரத்து 821 கோடிக்கு வட்டி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz