சமூக வலைத்தளங்களில் வெளியான நாடாளுமன்ற தேர்தல் தேதி வதந்தி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு....

Friday 18, January 2019, 21:21:00

2019ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஏப்ரல் முதல் வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

இந்திய தலைமை தேர்தல் ஆணைய வட்டாரத்தை மேற்கோள் காட்டியுள்ள ஏஜென்சி தகவல்கள் தேர்தல் தேதி பற்றிய யூகங்களை வெளியிட்டுள்ளன. அதன்படி மார்ச் 10 தேதிக்கு முன்னதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. அப்படி அறிவிக்கப்பட்டால் ஏப்ரல் மாதம் 10ம் தேதிவாக்கில் முதல் கட்டத்தேர்தல் நடைபெறும். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.

இறுதிக்கட்ட தேர்தல் மே 10ம் தேதிக்கு முன்னதாக முடிவடையும் படி தேர்தல் அட்டவணை இருக்கும். வாக்கு எண்ணிக்கை மே மாதம் 10ம் தேதியிலிருந்து 15ம் தேதிக்குள் இருக்கலாம். இதனால் தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளை செய்யுமாறு மாநில தேர்தல் அதிகாரிகளை தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. 

தேர்தல் தேதி மார்ச் 10ம் தேதிக்கு முன் அறிவிக்கப்படும் என்பதால் அதற்குள் அரசியல் கட்சிகளும் கூட்டணி பற்றி பேசி முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சமூக வலைத்தளங்களில் வெளியான நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் வதந்தி என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த போலியான அட்டவணை தேதிக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதனை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி காவல் துறையை அணுகும் படியும் டெல்லி தலைமை தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில் இன்று டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி டெல்லி காவல்துறையின் தகவல் தொழில் பிரிவின் சிறப்பு ஆணையருக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் 2019ம் ஆண்டு தேர்தல் தேதி என்று வெளியான அட்டவணை பொதுமக்கள் மத்தியில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz