வங்கிக் கடனை திருப்பி செலுத்தாமல் தனி விமானத்தில் வெளிநாடு தப்ப முயன்ற தொழிலதிபரைத் தடுத்து நிறுத்திய பஞ்சாப் வங்கி

Friday 25, January 2019, 19:31:15

ரூ. 300 கோடி கடனை திருப்பி செலுத்தாத தொழிலதிபர் பிரஜ் பினானிக்கு லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பித்து அவர் வெளிநாடு செல்வதை பஞ்சாப் நேஷனல் வங்கி தடுத்துள்ளது.

வங்கிகளில் கடன் வாங்கி விட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வங்கிகளுக்கு பெரும்பாலும் தங்கள் கடனாளிகள் நாட்டை விட்டு ஓடிய பிறகே தெரிய வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு கடந்த வருடம் ஒரு உத்தரவை அளித்தது.

அதன்படிபொதுத்துறை வங்கி தலைமை அதிகாரிகள் தங்களிடம் கடன் வாங்கி வெகுநாட்களாகியும் திருப்பி செலுத்தாத தொழிலதிபர்களுக்கு லுக் அவுட் நோட்டிஸ் அளித்து அவர்களை நாட்டை விட்டு செல்ல தடை விதிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர் பிரஜ் பினானிக்கு சொந்தமான எடியார் ஜிங்க் (முன்பு பினானி சிமெண்ட் என்னும் பெயரில் இயங்கி வந்த ) நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து ரூ.300 கோடி கடன் வாங்கி இருந்தது. அதை திருப்பி தராததால் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் வங்கி வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணைகளுக்கு பிரஜ் பினானி வராமல் இருந்துள்ளார். அதை ஒட்டி இந்த மாதம் 20 ஆம் தேதி தீர்ப்பாயம் மூலம் தொழிலதிபர் பினானி மீது பஞ்சாப் வங்கி தலைவர் சுனில் மேத்தா லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பித்தார். பிரஜ் பினானி நேற்று முன் தினம் தனி விமானத்தில் லண்டன் செல்வதற்காக மும்பை விமான நிலையம் வந்திருந்தார்.

இந்த லுக் அவுட் நோட்டிஸ் ஏற்கனவே அனைத்து விமான நிலைய அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதை ஒட்டி பினானி மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அவர் எவ்வளவோ முறையிட்டும் அவரை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அதன் பிறகு அவர் ஜெய்ப்பூர் செல்வதாக கூறிய பிறகு ஜெய்ப்புர் செல்ல அனுமதித்துள்ளனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz