
திருச்சி முக்கொம்பு மேலணையில் நேற்றிரவு 9 மதகுகள் உடைந்ததுடன் 4 தூண்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலணையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மதகுகள் உடைந்ததால் அதிர்ச்சியடைந்து அது குறித்தத் தகவலை உயரதிகாரிகளுக்கு உடனே தெரியப்படுத்தினர்.
இதையடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முன்னெச்சரிக்கையாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர். மேலணையில் 9 மதகுகள் உடைந்ததால் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

திருச்சி முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்த இடத்தை தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலணையில் மதகுகள் உடைந்த இடத்தை நேரில் ஆய்வுசெய்த பின் பிரபாகர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், முக்கொம்பில் இருந்து காவிரியில் நீர்திறக்கும் பகுதி பாதுகாப்பாக உள்ளது. விவசாயத்துக்கு தேவையான நீர் காவிரியில் இருந்து எந்தவித பாதிப்பும் இன்றி திறந்து விடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பழமையான அணை இது என்பதால் அரசின் ஆலோசனையுடன் ஆய்வுகள் தொடரும்.
முக்கொம்பு மேலணை உடைப்புக்கு காரணம் என்னவென்பது குறித்த விசாரணை தற்போது நடக்கிறது. அணையில் ஏற்பட்ட உடைப்பை சீரமைப்பது பற்றி ஆய்வு முதற்கட்டமாக செய்யப்பட்டு வருகிறது. முக்கொம்பு மேலணையில் உடைப்புக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று மேலணை நிலவரம் குறித்து தெரிவித்தார். இந்த ஆய்வின் போது தலைமைப் பொறியாளர்கள் செந்தில்குமார், செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.