அ.தி.மு.க.வுடன் பா.ம.க. அமைத்து இருக்கும் மக்கள் நலக்கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

Tuesday 19, February 2019, 17:54:22

இன்று அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகி உள்ளது. பாமக - அதிமுக ஒப்பந்தம் இன்று தான் கையெழுத்தானது. அதன்படி 7 லோக்சபா தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட இருக்கிறது.

இந்த தேர்தல் கூட்டணி உறுதியான பின் பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக தலைவர்களுடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தின் நலனுக்காக இந்த கூட்டணி உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

மேலும், நாங்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பதை பின்னர் அறிவிப்போம். தமிழக உரிமைகளை மீட்டெடுக்க 10 கோரிக்கைகளை முதல்வர், துணை முதல்வரிடம் அளித்துள்ளோம்.

தமிழக மக்களின் நலனுக்காக இந்த கூட்டணி அமைக்கப்படுகிறது. அதிமுக - பாமக கூட்டணி மக்கள் நல கூட்டணி, மெகா கூட்டணியாக அமையும், என்று குறிப்பிட்டார்.

ஏற்கனவே அதிமுகவிற்கு எதிராக தமிழகத்தில் மக்கள் நலக்கூட்டணி அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து அமைத்த இந்தக்கூட்டணி முழுக்க முழுக்க அதிமுக, திமுகவிற்கு எதிரான கூட்டணி ஆகும்.

ஆனால் தேர்தல் தோல்விக்கு பின் அந்த கூட்டணி காணாமல் போனது. தற்போது இந்த புதிய அதிமுக - பாமக கூட்டணியை ராமதாஸ் மக்கள் நலக்கூட்டணி என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல் இதை மெகா கூட்டணி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

லோக் சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, திமுக காங்கிரஸ் கூட்டணியில் சேர பாமக திரைமறைவு பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில், இன்று திடீரென அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டுள்ளது. இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரே நேரத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளிடையேயும் பாமக பேசி வந்த நிலையில், அதிமுக கூடுதல் தொகுதி ஒதுக்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

ராமதாசின் இந்த முடிவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், ஆம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் பாமக அதிமுக கூட்டணி குறித்து கடுமையாக சாடினார்.

2009-ம் ஆண்டு நடைபெற்ற  தேர்தலில் தோற்றுப்போன கூட்டணி பாமக-அதிமுக கூட்டணி என்றவர், அதிமுக ஆட்சியை விமர்சித்து அண்மையில் புத்தகம் வெளியிட்டவர் பாமக தலைவர் ராமதாஸ் என்றும் அந்த பெரிய மனுஷன்தான் அற்போது  தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார் என்று கூறினார்.

அவருக்கு கவலை, ராமதாசுக்கு வெட்கம், சூடு-சொரணை இல்லை, நாட்டை பற்றி கவலையில்லை என்று கூறிய ஸ்டாலின், ராமதாசுக்கு பணத்தை பற்றித்தான் கவலை என்றும்  கடுமையாக விமர்சித்தார்.

அதே சமயத்தில் இந்த கூட்டணி கொள்கை அடிப்படையில் அமைந்தது இல்லை. எதிரிகளை வீழ்த்துவதற்காகவே அமைக்கப்பட்டதாக அதிமுக எம்.பி. தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார்.  

மதத்தின் பெயரால் நாட்டை பிளவுபடுத்தும் பாஜகவுடன் பாமக எப்படி கூட்டணி வைக்கிறது. சமூக நீதிக்கு எதிரான பாஜக, அதிமுக, பாமக கூட்டணியை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

 

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz