"சேலத்தில் எங்களது வெற்றி என்பது தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒன்று" - காங்கிரஸ் செயல்தலைவர் மோகன் குமாரமங்கலம் பேட்டி

Sunday 24, February 2019, 01:07:30

திமுக கூட்டணியில் இடம் பெற்று பத்து தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது அக் கட்சியினருக்குப் பெருமகிழ்ச்சியினைத் தந்துள்ளது. தமிழகக் காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர்களுள் ஒருவரும், காங்கிரஸ் கட்சியின் மேற்கு மண்டலத் தேர்தல் பொறுப்பாளருமான மோகன் குமாரமங்கலம் சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவது அனேகமாக உறுதி என்றே அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டு முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவருமான மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகனான கோகன் குமாரமங்கலம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலுக்கு நன்கு அறிமுகமானவர். தனது பொறுப்பில் உள்ள மேற்கு மண்டலத்துக்காக மூன்று தொகுதிகளைக் கட்சித் தலைமையிடம் இவர் கேட்டு வருகிறார்.

அவரை நாம் என்என்டிவெப்.காம் இணைய இதழுக்காகச் சந்தித்துப் பேசினோம்.

“தொழில்களும் வணிகமும் செழிக்கச் செய்யும் வகையில் வணிக ரீதியிலான கார்கோ ஏர்போர்ட் கட்டாயம் சேலத்துக்குத் தேவை. இதைத் தற்போதுள்ள காமலாபுரம் விமான நிலையத்தில் கொண்டுவராமல் புதியதாக ஒரு இடத்தில் தொடங்கினால் நல்லது. ஐ.டி பார்க், சிப்காட் போன்றவை முழு வீச்சில் செயல்படும்போது கார்கோ ஏர்போர்ட்டின் அவசியம் உங்களுக்குப் புரியும்.

இடமும், நீருமே ஒரு தொழில் தொடங்கப்படுவதற்கும், வெற்றிகரமாக அது இயங்குவதற்குமான அடிப்படைத் தேவைகள். ஒரு ஏக்கர் நிலத்துக்கு 30 இலட்சம், 40 இலட்சம், 50 இலட்சம் என்று விலை கூறப்படும்போது அந்த விலை தந்து புதியதாகத் தொழிலைத் தொடங்குவது என்பது மிகவும் சிரமம்.    

சேலம் மாவட்டத்தினைச் சுற்றி கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில் பரவலாக நடந்து வருகிறது.   இந்த நெசவுத் தொழிலை மேலும் விரிவடையச் செய்யும் விதத்தில் சேலத்தில் புதியதாக ஜவுளிப் பூங்கா ஒன்று தொடங்கப்பட வேண்டும் என்பது காங்கிரசின் முக்கியமான எண்ணங்களில் ஒன்று..

சேலம் ஸ்டீல் ப்ளாண்டின் தயாரிப்புகள் மிகவும் உறுதியானவை; உலக அளவில் தரம் வாய்ந்தவை. அப்படிப்பட்ட சேலம் இரும்பாளையினைத் தனியாருக்குத் தாரை வார்க்காமல் அரசே தொடர்ந்து நடத்தும்படிச் செய்ய வேண்டும். சேலம் இரும்பாலையினை வாங்குவதற்காகப் போட்டியிட்டு வரும் ஜேஎஸ்டபிள்யூ, நடானி, அம்பானி, மித்தல் போன்ற அனைவருக்கும் சேலம் இரும்பாலை அமைந்துள்ள இரண்டாயிரம் ஏக்கர் நிலமே பிரதானமான குறி!

இரும்பாலைக்குத் தரும் விலையில் கிடைக்கப் போகும் இந்த இரண்டாயிரம் ஏக்கர் நிலம் அவர்களுக்கு மிகப் பெரிய போனன்சா என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்த நிலத்துக்கு அரசாங்கம் நிர்ணயித்துள்ள வழிகாட்டு மதிப்பு விலை மிக மிக சொற்பம். இ.ந்த விலையினை விட சந்தை விலை சுமார் இருபது மடங்கு அதிகம் என்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.

இப்போது நான் எங்கள் கட்சியின் இளைஞர் பட்டாளத்துடன் சேலம் மாவட்டத்தின் பல்வேறு புறநகர்ப் பகுதிகளுக்கும் சென்று அந்தப் பகுதி மக்களின் தீர்க்கப்படாத பிரச்னைகள், அவர்களது தேவைகள் என்ன என்பது குறித்து கேட்டு வருகிறேன். இதை வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரமாக சிலர் உள் நோக்கத்துடன் கூறி வருகின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளாக இது போன்ற சுற்றுப் பயணத்தை நான் மேற்கொண்டு வருகிறேன். எனவே இதைத் தேர்தலுக்கான பயணமாகக் கூறுவது சரியல்ல.

நான் செல்லுமிடங்களில் எல்லாம் எனக்கு மக்களின் அன்பான வரவேற்பு சிறப்பாகக் கிடைத்து வருகிறது. அவர்களில் பெரும்பாலோனோருக்கு அதிமுகவைக் காட்டிலும் பாஜக மீதுதான் அதிகப்படியான அதிருப்தியும் வெறுப்பும் உள்ளது. அதிமுக, பாஜகவின் அடிமையாகவே செயல்பட்டு வருகிறது என்பதை அவர்கள் மிகத் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர்.

வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது சொந்த மாவட்டமான சேலத்தில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் ஜெயிக்க வேண்டுமென்பதற்காக முதல்வர் மிக அதிகமாக செலவிட வாய்ப்புண்டு என்று சொல்பவர்களுக்காக நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்வேன். கோடிகளில் செலவழித்துத் தோற்றவர்களும் உண்டு. மக்களின் அன்பைப் பெற்றவர்கள் மிகக் குறைவாகச் செலவழித்த போதிலும் நம்ப முடியாத வெற்றியினைப் பெற்றதும் உண்டு.

பணம்தான் ஒரு தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கும் என்றால் அம்பானி போன்றவர்கள் தங்களது ஆட்களை நிறுத்தி ஜெயித்து விடலாமே. மக்களின் உள்ளக் குமுறலை எந்தக் காசு தந்தும் அடக்கி விட முடியாது; மக்களின் உணர்வுகளை விலை தந்து எளிதாக வாங்கி விடவும் முடியாது.

நான் வெளியூர்க்காரன்; உள்ளூரில் என்னைக் காண முடியாது என்றும் என்னைப் பற்றி தவறான பிரச்சாரங்கள் கிளப்பபாட்டு வருகின்றன. உள்ளூரில் அமர்ந்து கொண்டு உள்ளூர் பிரச்னைகளை தீர்ப்பதுதான் எம்.பி.யின் பணி என்பது சொல்லப்படுகிறது. அதற்கு கவுன்சிலரே போதுமானவர். எம்.பி. என்பவர் தனது தொகுதினை மேம்படுத்துவதற்கான கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தற்போதைய சேலம் அதிமுக எம்பி சேலத்துக்காரர்தான். அவரை சேலம் மக்களால் பார்த்துவிட முடிகிறதா? தங்கள் குறைகளை முறையிட்டுத் தீர்வுதான் காண முடிகிறதா என்ன?

ஒரு தொகுதியின் எம்.பி. தனது தொகுதிக்குள் புதியதாகத் தொழில் தொடங்க முனைவோரைத் வரவழைத்துப் புதிய தொழில்கள் தொடங்கச் செய்பவராக இருக்க வேண்டும். இதன் மூலம் வேலையின்றித் தவிக்கும் எண்ணற்ற இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உள்ளூரில் ஏற்படுத்தித் தர வேண்டும். சேலம் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் இந்த வகையில்தான் எனது செயல்பாடுகளும் இருக்கும்.

நான் சேலத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் ஜெயிப்பேனா என்று கேட்கிறார்கள். எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் நான் ஜெயிக்கப் போகிறேன் என்பதுதான் விடை காணப்பட வேண்டிய ஒரே கேள்வியாக இருக்கப் போகிறது” என்று நம்பிக்கையுடன் உறுதியான குரலில் நம்மிடம் கூறினார் மோகன் குமாரமங்கலம்      

 

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz