திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

Monday 04, March 2019, 16:48:31

பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஐ.ஜே.கே. கட்சி உள்ளன. ஆனால் அந்த கட்சிகளுக்கு அதிகாரப்பூர்வமாக தொகுதிகள் ஒதுக்கப்படாமல் இருந்தது. திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் அந்தக் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.

ம.தி.மு.க. 3 தொகுதிகளையும், விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகளையும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலா 2 தொகுதிகளையும் கேட்டு வந்தன. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய உடன்பாடு ஏற்பட்டது.

இது தொடர்பாக இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை உறுதி செய்தனர். சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிட உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏற்கனவே கூறியுள்ளார். மற்றொரு தொகுதியாக திருவள்ளூர் அல்லது விழுப்புரம் வி.சிக்கு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz