ஏரிக்கரையில் வைத்து எரிக்கப்பட்ட செல்லாத ஐநூறு ரூபாய் நோட்டு மூடைகள் - கிருஷ்ணகிரியில் பரபரப்பு

Monday 04, March 2019, 17:08:25
கிருஷ்ணகிரி நகரில் ஆஞ்சநேயர் கோவில் அருகில் பெங்களூரு செல்லும் சாலையில் உள்ள புதூர் ஏரிக்கரை அருகில் நேற்று முன்தினம்  செல்லாத பழைய 500 ரூபாய் கட்டுகள் மூட்டை, மூட்டையாகக் கிடந்தன. அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இதக் கண்டு பெரியவர்களிடத்துச் சொன்னதையடுத்து எரிக் கரையில் மக்கள் திரளாகக் கூடினர்.
 
சினிமாவில் பயன்படுத்துவதை போன்ற டம்மி ரூபாய் நோட்டுகளாக அவை இருக்குமோ என்று அருகில் சென்று அதனைக் கையில் எடுத்துப் பார்த்தவர்கள் அவை புழக்கத்தில் இல்லாத செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட ஒரிஜினல் ரூபாய் நோட்டுக்களே என்று அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். 
 
எரிக் கரையில் கிடந்த இந்த ரூபாய் நோட்டுகளைக் கொண்ட மூட்டைகளில் சிலவற்றை யாரோ தீ வைத்துவிட அவை எரிந்து சாம்பலாயின. இது குறித்துத் தகவல் அறிந்த போலீசார்  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீதமுள்ள நோட்டுகளும் எரிந்திடாமல் தீயினை அணைத்தனர். இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
செல்லாத 500 ரூபாய் கட்டுகளை மூட்டையாக கொண்டு வந்து ஏரிக்கரையில் போட்டவர்கள் யார்?  விறகு போட்டு, மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து அந்த நோட்டுகளை அவர்கள் எரிக்கக் காரணம் என்ன?  என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
ஏரிக்கரையில் எரிந்தும் எரியாமலும் மூட்டை மொட்டையாகக் கண்டெடுக்கப்பட்ட செல்லாத ஐநூறு ரூபாய்கள்  பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பினையும், போலீசாருக்குத் தலைவலியினையும் தேர்படுத்தி உள்ளன.
© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz