திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!.

Tuesday 05, March 2019, 18:46:28

மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளதால், அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதில் திமுக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இன்று உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால் இன்னும் அதிமுக தரப்பில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. தேமுதிக தனது நிலைப்பாட்டை அறிவிக்காததால் அதிமுக தொகுதி பங்கீட்டை அறிவிப்பதில் தாமதம் ஆகி வருகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக 20 இடங்களில் போட்டியிடும் என அவர் தெரிவித்தார். விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, ஐ.ஜே.கே, கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகளுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி ஒதுக்கீடு என்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு யோசனை கூறியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார். திமுக உடனான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மனிதநேய மக்கள் கட்சிக்கு இந்த முறை கூட்டணியில் இடம் ஒதுக்க வாய்ப்பில்லை என ஸ்டாலின் தெரிவித்தார். முன்னதாக அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை மனிதநேய மக்கள் கட்சியுடன் திமுக 2-ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எட்டப்படாததால் அக்கட்சிக்கு கூட்டணியில் சீட் ஒதுக்கப்படவில்லை.

திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு இடம் இல்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு முடிந்து விட்டதாகவும், இனி, யாருக்கும் எங்கள் கூட்டணியில் இடம் இல்லை என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந் நிலையில் தனித்து நிற்கும் தேமுதிக, அதிமுக கூட்டணியில் தான் இணைய வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதிப் பட்டியல்:

திமுக: 20 தொகுதி, காங் : 10 தொகுதி, விசிக : 2 தொகுதி, மா.கம்யூ : 2 தொகுதி, இ.,கம்யூ : 2 தொகுதி, மதிமுக : 1 தொகுதி, ஐஜேகே : 1 தொகுதி, கொமதேக : 1 தொகுதி

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz