டெல்லி: என்ன செய்தாலும், என்ன நடந்தாலும் ரபேல் ஆவணங்களை வெளியிட உதவியது யார்? என்று சொல்ல மாட்டோம் என்.ராம் அதிரடி!

Thursday 07, March 2019, 20:22:28

ரபேல் தொடர்பான ஆவணங்களை தங்களிடம் கொடுத்தது யார் என்று என்ன நடந்தாலும் வெளியே தெரிவிக்க மாட்டேன் என்று தி இந்து பத்திரிக்கையாளர் என்.ராம் தெரிவித்துள்ளார்.

ரபேல் வழக்கு விசாரணையில் தி இந்து பத்திரிக்கை வெளியிட்ட ஆவணங்கள் முக்கிய பங்கு வகிக்க தொடங்கி உள்ளது. பத்திரிக்கையாளர் என்.ராம் கட்டுரையில் வெளியான ஆவணங்களை திருட்டு ஆவணங்களாக கருத வேண்டும், அதை ஏற்றுக்கொள்ள கூடாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதேபோல் இந்த ஆவணங்களை வெளியிட்ட பத்திரிக்கையாளர் என்.ராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆனால் திருட்டு ஆவணங்களாக இருந்தாலும் அதை விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த ஆதாரங்களை வெளியிட்ட தி இந்து நாளிதழ் பத்திரிக்கையாளர் என்.ராம் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், நாங்கள் பாதுகாப்புத்துறையில் இருந்து ஆவணங்களை திருடவில்லை. நாங்கள் ஒரு ரகசிய நபரிடம் இருந்து இதை பெற்றோம். என்ன செய்தாலும், என்ன நடந்தாலும் அது யார் என்று சொல்ல மாட்டோம். நாங்கள் வாக்கு கொடுத்துவிட்டோம்.

நாங்கள் மக்கள் நலனுக்காக இதை செய்தோம். இதுதான் பத்திரிக்கை தர்மம். பல முக்கிய தகவல்களை அரசு மறைத்து இருக்கிறது . பாராளுமன்றத்திலும், வெளியிலும் பலர், பல கேள்வி எழுப்பியும் கூட அரசு அனைத்தையும் மறைத்து இருக்கிறது. அதனால் நாங்கள் வெளியிட்டோம்.

என்ன தவறு நாங்கள் தவறு செய்ததாக அரசு கூறுகிறது. திருடிவிட்டோம் என்றும் அரசு கூறுகிறது. நாங்கள் திருடி இருந்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. இதில் தேசிய பாதுகாப்பு எங்குமே இல்லை. நாட்டின் நலன் மட்டுமே இருக்கிறது. ஆர்டிஐ சட்டம் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.

நாங்கள் ஆவணங்களை திருடிவிட்டோம் என்று சொல்லுவதன் மூலம், அரசே நாங்கள் வெளியிட்ட ஆவணங்கள் உண்மை என்று உணர்த்தி உள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் மேலும் ஆதாரம் எதுவும் தேவையில்லை என்பது தெளிவாகிறது. இப்போது எல்லோருக்கும் தெரியும், நாங்கள் வெளியிட்டது உண்மையான ஆவணம்தான் என்று, என, என்.ராம் குறிப்பிட்டு இருக்கிறார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz