தரம் தாழ்ந்து விட்டார் பிரேமலதா விஜயகாந்த்... புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆவேசம்!

Sunday 10, March 2019, 15:33:54

கூட்டணி பேரம் படியாததால் திமுகவைப் பற்றி பிரேமலதா தவறாக பேசி வருவதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ச்சியாக திமுகவை பற்றியும், அதன் தலைவரைப் பற்றியும் தரக்குறைவான விமர்சனம் செய்து வருகிறார். இது அவருடைய அரசியலுக்கு ஏற்றதல்ல.

தேமுதிக திமுகவுடனும், அதிமுகவுடன் கூட்டணி பேரம் பேசினார்கள். ஆனால் அந்த பேரம் எடுபடவில்லை. திமுகவின் கதவு மூடப்பட்டுவிட்டது என ஸ்டாலின் சொல்லிவிட்டார். அதன்பிறகு தேமுதிகவினர் அதிமுகவோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் பிரேமலதா தனிப்பட்ட முறையில் எந்தவொரு அரசியல் கட்சி தலைவர்களையும் விமர்சனம் செய்வதை ஏற்றுகொள்ள முடியாது. கொள்கை ரீதியாக விமர்சனம் செய்யலாம். இதிலிருந்து பிரேமலதா ஒரு தரம் தாழ்ந்த அரசியல்வாதி என்பது தெரிகிறது. தேமுதிக மக்கள் மத்தியில் செல்லும்போது மக்கள் கண்டிப்பாக அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த ரங்கசாமி, தேர்தலில் வெற்றி பெற்ற பின் ஜெயலலிதாவை திரும்பி பார்க்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ஜெயலலிதா, ரங்கசாமி தன்னை முதுகில் குத்துவிட்டார் அதனால் ரங்கசாமிக்கு போடுகிற ஓட்டு செல்லாத ஓட்டு என ஜெயலலிதா பகிரங்கமாக விமர்சனம் செய்திருந்த நிலையில், அதிமுகவுடன் ரங்கசாமி தற்போது வைத்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி.

ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர்களுடன் எப்படி கூட்டணி வைத்துள்ளீர்கள் என அதிமுகவினர் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திய முதலமைச்சர் நாராயணசாமி, பாஜகவுடன் ரங்கசாமி கூட்டணி வைத்துள்ளதிலிருந்தே ரங்கசாமி சொந்த காலில் நிற்க தெரியாதவர் என ரங்கசாமியை முதலமைச்சர் நாராயணசாமி சாடினார்.

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz