பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அதிமுக நாகராஜ் கட்சியில் இருந்து நீக்கம்

Monday 11, March 2019, 18:25:53

200க்கும் மேற்பட்ட பெண்களை பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்து, பணம் பறித்து, மோசமாக கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்த  கும்பல் குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் போலீசில் புகார் தந்ததை அடுத்து நடந்த பதைக்க வைக்கும் சம்பவங்கள் குறித்த உண்மை வெளியுலகிற்குத் தெரிய வந்தது.

இந்தக் கொடூர சம்பவங்களில் ஈடுபட்டவர்களுள்  பார் நாகராஜ், பாபு, செந்தில் குமார், வசந்த குமார் ஆகியோர் முக்கியமானவர்களாகப் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பார் நாகராஜ் ஜெயலலிதா பேரவை செயலாளர். இவர் அதிமுகவில் உறுப்பினராக இருக்கிறார். இவர்களை போலீஸ் மூன்று நாட்களுக்கு முன் கைது செய்தது. இந்த நிலையில் இவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். மூன்று நாட்களில் இந்த 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இளம்பெண்கள் ஆபாச வீடியோ தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் அண்ணனை நான்கு பேர் கொண்ட கும்பல் சில நாள்களுக்கு முன் மோசமாக தாக்கி, அந்த புகாரை வாபஸ் பெற சொல்லி வற்புறுத்தி உள்ளது.

இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் தொடர்புடைய பார் நாகராஜ் எனப்படும் ஏ.நாகராஜ் தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நாகராஜ் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. கட்சி ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர். முதல்வர் பழனிசாமி ஆகியோர் உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz