"தேர்தல் ஆணையம் ஒரு நாடகக் கம்பெனி" - சீமான் கடும் தாக்கு!

Tuesday 19, March 2019, 22:55:36

சென்னை சேர்ப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் தனது கட்சியின் சின்னமான விவசாயி சின்னத்தை வெளியிட்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது....

“விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு இடைத்தேர்தலை சந்திக்கும் நாம் தமிழர் கட்சி. விவசாயிகளையும் விவசாயத்தையும் காக்கவே எங்களுக்கு இந்த சின்னம் கிடைத்துள்ளது.

வரும் 22ஆம் தேதி விருப்ப மனுக்கள் பெறப்பட்ட பின் எங்களுடைய வேட்பாளர்களை வரும் 23 ஆம் தேதி மயிலை மாங்கொல்லையில் வைத்து ஒட்டுமொத்தமாக அறிவிப்போம்.

நாம் தமிழர் கட்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் 18 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும். 20 ஆண் வேட்பாளர்களும், 20 பெண் வேட்பாளர்களும் எங்கள் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் 33% இட ஒதுக்கீட்டை பெண் வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என போராடி வரும் நாங்கள் எங்கள் கட்சி மூலம் அதை முதலில் கொண்டு வருவோம். இடைத் தேர்தலில் சரிபாதி உரிமை பெண் வேட்பாளர்களுக்கு அளிப்போம்” என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “ஹிந்தி தெரிந்தவர் மட்டுமே பிரதமராக முடியும் என்ற முறையை மாற்ற வேண்டும். சுழற்சி முறையில் பிரதமர், குடியரசுத் தலைவர் பதவிகளை ஒவ்வொரு மாநிலத்திற்கும் வழங்க வேண்டும்.

நாட்டிற்காக போராடும் வீரர்களின் உயிரை அப்பட்டமாக பலி கொடுத்துள்ளது இந்த அரசு. கோயில்களில் ஆடு, மாடுகளை பலி கொடுப்பதுபோல ராணுவ வீரர்களின் உயிரை பா.ஜ.க அரசு பலிகொடுத்துள்ளது.

எத்தனையோ உயர்மட்ட பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கு தெரியாமல் 1 கி.மீ தூரம் வரை தீவிரவாதிகள் எவ்வாறு நுழைந்திருக்க முடியும்? நாட்டின் ராணுவ வீரர்களையும், ரஃபேல் விமான கோப்புகளையும் பாதுகாக்க முடியாத அரசு எப்படி நாட்டின் பாதுகாவலர்கள் என கூறிக் கொள்ள முடியும்?” என்று மத்திய அரசினை ஒரு பிடி பிடித்தார்.

“சமரசம் இல்லாத தலைவரையே நாங்கள் எதிர்பார்த்தோம், எனவே, கூட்டணிக்கு அழைத்தவர்களை புறக்கணித்தோம். சரணடைந்து வாழ்வதை விட, சண்டையிட்டு சாவதே மேல் என்ற கொள்கையை கொண்டதால் எங்கள் கட்சி கூட்டணியை புறக்கணித்து தனித்துப் போட்டியிட முடிவெடுத்தது. தேர்தல் ஆணையம் ஒரு நாடக கம்பெனி, ஒப்புக்காக விதிகளை விதித்துவிட்டு அதைக் கடைபிடிக்க மறுக்கிறது” என்று முத்தாய்ப்பாகக் கூறி முடித்தார் சீமான்

 

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz