தன்னை அவதூறாகப் பேசிய ராதாரவி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நடிகை நயன்தாரா.

Monday 25, March 2019, 19:11:03

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலையுதிர் காலம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் ராதாரவியின் பேச்சு, நடிகைகளை இழிவு படுத்தும் விதத்தில் இருந்ததாக சர்ச்சை கிளம்பியது.
கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் ராதாரவி பேசியதாவது, ‘சினிமாத்துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் ஒரு லெஜண்ட் ஆவார்கள்.
அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். அவர்களுடன் எல்லாம் நயன்தாராவை ஒப்பிடுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நயன்தாரா நல்ல நடிகை, இவ்வளவு நாள் திரையுலகில் நிலைப்பதே பெரிய விஷயமாகும். அவரைப் பற்றி வராத செய்தியே கிடையாது. அதெல்லாம் தாண்டி நிற்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை 4 நாட்கள் மட்டுமே ஞாபகம் வைத்திருப்பார்கள். பிறகு விட்டுவிடுவார்கள். நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார்.
முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்.
இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என பேசியுள்ளார். ராதா ரவியின் இந்தப் பேச்சு திரையுலைச் சேர்ந்த பலராலும் மிகக் கடுமையாக எதிர்க்கப்பட்டது. இணையதளத்தில் இந்த விவகாரம் வைரலாகப் பரவியது. பலராலும் கண்டனத்துக்கு ஆளானது.
இதையடுத்து நடிகர் ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா.
அந்த அறிக்கையில், “பொதுவாக நான் விளக்க அறிக்கை எதுவும் வெளியிடுவதில்லை. என் வேலை என்னை முன்னிறுத்தும். முதலாவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றி மற்றும் பாராட்டுகள். ராதாரவி அவர்களின் வெறுக்கும் வகையிலான பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்கு நன்றிகள்.

இவர் போன்ற ஆட்கள் மீதும் அவர்கள் குடும்பத்தில் வாழும் பெண்கள் மீதும் நான் மிகவும் பரிதாபப்படுகிறேன். திரு ராதாரவி இளம் தலைமுறையினருக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், அவர் வேறு ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். ராதாரவி போன்ற ஆட்கள் துறையைவிட்டு வெளியேறி கவனம் ஏதும் பெற முடியாமல் போகும் காலத்தில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க இதுபோன்ற ஒரு அற்பமான செயல்களால் பிரபலமடைய நினைக்கின்றனர்.

நீங்கள் எத்தனை எதிர் விமர்சனங்கள் சொன்னாலும் நான் மீண்டும் பேயாக, சீதாவாக, கடவுளாக, தோழியாக, மனைவியாக, காதலியாக என இன்னும் பல கதாபாத்திரங்களை என் ரசிகர்களுக்காக ஏற்று நடிக்கத்தான் போகிறேன்” எனக் !குறிப்பிட்டுள்ளார்.

நடிகை நயன்தாரா குறித்து அவதூறாக பேசிதற்காக நடிகர் ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கி திமுக நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் ராதாரவி, என்னால் திமுக.,விற்கு பாதிப்பு என்றால் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன். நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் வருத்தம் தெரிவிக்கிறேன். கொலையுதிர் காலம் பட விழாவில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz