தர்மபுரி: இரண்டு ஆண்டுகளில் போலீசாரால் காப்பாற்றப்பட்ட ஆயிரம் உயிர்கள்...

Wednesday 05, September 2018, 00:13:13

உயிர் காத்து துயர் துடைக்கும் உன்னதப் பணியினை மேற்கொள்பவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் போற்றத் தக்கவர்களே. அந்த வகையில், ஒன்றல்ல, இரண்டல்ல கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் ஆயிரம் பேர்களை தற்கொலை முயற்சிகளில் இருந்து காப்பாற்றி, நல்வழிப்படுத்தி அவர்களை வாழவைத்த நற்பணியினை ஓசைப்படாமல் செய்து சாதனை புரிந்துள்ளனர், தர்மபுரி மாவட்டக் காவல்துறையினர்.

எத்தனையோ எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளாகும் போலீசார், சில சமயங்களில் செய்யும் நற்செயல்கள் அவர்கள் மீதான அந்த விமர்சனக் கறைகளை ஓரங்கட்டி மறக்கச் செய்து விடுகின்றன. கடந்த இரு ஆண்டுகளில் ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றிய தர்மபுரி மாவட்டக் காவல்துறையினரின் மனிதநேய மிக்க உன்னதமான இந்தப் பணியைப் பற்றி வாசகர் ஒருவர் தந்த தகவல் உடனடியாக நம்மை தர்மபுரிக்கு விரைய வைத்தது.

தர்மபுரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பண்டி கங்காதரை நேரில் சந்தித்து இது பற்றிக் கேட்டோம்.

“சட்டம் ஒழுங்கைக் காப்பது மட்டுமல்ல எங்கள் பணி;  விலை மதிப்பற்ற மனித உயிர்கள் மரித்துப் போகாமல் காப்பதும் எங்கள் தலையாய பணியே.....”என்று உணர்வுபூர்வமாக நம்மிடம் பேசத் தொடங்கினார், தர்மபுரி எஸ்.பி. பண்டி கங்காதர். மேலும் அவர் தொடர்ந்து, “எங்களுடைய வேலையினை நாங்கள் சரிவரச் செய்திருக்கிறோம்.... இதனைச் சாதனை என்று பார்க்க வேண்டாமே!” என்றார் அடக்கமாக.

“இரண்டு ஆண்டுகளில் ஆயிரம் பேர் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பது உண்மையிலேயே வியப்புக்குரிய ஒன்றுதான். அது குறித்து விரிவாகச் சொல்லுங்களேன்” என்று அவரிடம் நாம் கேட்டோம்.

நீங்கள் குறிப்பிட்ட இரண்டு ஆண்டுகளில் நடந்த 1000 தற்கொலைத் தடுப்புச் சம்பவங்களில் 925 சம்பவங்கள் இங்குள்ள சுற்றுலாத்தலமான ஒகேனக்கல்லில் நடந்தவை. சுற்றுலாப் பயணிகளைப் போலவே, ஒகேனக்கலில் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ள வரும் மக்களின் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது.

தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், அயல்நாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து செல்கின்றனர். இதுவே தொடர் விடுமுறை நாட்கள் என்றால் பத்தாயிரம் முதல் இருபதாயிரம்வரை சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வார்கள்.

இப்படிப்பட்ட ஊரில் சுற்றுலாப் பயணியாக வருபவர்கள் யார்? தற்கொலை மனோபாவத்துடன் வருபவர்கள் யார்? என்பதை அடையாளம் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. எனவே இதற்காகவே  ஒகேனக்கல் காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்களைக் கொண்ட ஒரு தனிக் குழுவினை அமைத்தோம். இந்தக் குழுவுக்கு தற்கொலை எண்ணத்துடன்  வரும் நபர்களை கூட்டத்தில் எவ்வாறுக் கண்டறிவது? அவர்களை எப்படி மீட்பது? போன்ற சிறப்புப் பயிற்சிகள் தரப்பட்டு கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது..

ஒகேனக்கலில் ஆபத்தான சில பகுதிகளில் கூடுதலாகக் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் சக்தி வாய்ந்த கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் சந்தேகப்படும்படியான ஆட்கள் நடமாடுவது கண்டறியப்பட்டால்  உடனடியாக அவர்களை விரைந்து மீட்க ஒரு குழு எப்பொழுதும் தயாராக உள்ளது.

ஒகேனக்கல்லில் மட்டும் 2016-2017 ம் ஆண்டு தற்கொலைக்கு முயன்ற 562 பேர், 2017-2018 ம் ஆண்டு செப்டம்பர் வரை 363 பேர் என ஒகேனக்கல்லில் மட்டுமே 925 பேர்களை  எங்களது ‘சூசைட் ரெஸ்கியூங் போர்ஸ்’ காப்பாற்றியுள்ளது. அவர்களுக்கு தற்கொலை எண்ணத்தை மாற்றும் வகையில் மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் தந்து புனர்வாழ்வுக்கும் ஏற்பாடுகள் செய்து பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது தவிர, இந்த இரு ஆண்டுகளில் தர்மபுரி மாவட்டம் முழுவதிலுமாக 75 பேர்களுக்கும் அதிகமானோர் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப் பட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட திட்டமிடப்பட்ட முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளால்  இதுவரையில் சுமார் 1000 பேர்களை எங்களால் காப்பாற்ற முடிந்தது; ஆயிரம் பேர் காப்பாற்றப்பட்டதன் மூலம் ஆயிரம் குடும்பங்களைக் காப்பாற்றிய நிறைவு எங்களுக்கு....” என தர்மபுரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் பெருமிதத்தோடு கூறுகிறார், தர்மபுரி மற்றும் பென்னாகரம் பேருந்துகளின் சந்தேகப்படும்படியாக யாரேனும் பயணித்தால் அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்க ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘தற்கொலை செய்துகெண்டால் தங்கள் உடல் கூட தங்கள் குடும்பத்தினர் கைகளுக்கு கிடைக்கக்கூடாது என்ற விரக்தியான எண்ணம் கொண்டவர்களே ஒகேனக்கல்லுக்கு தற்கொலை செய்யும் முடிவுடன் வருகின்றனர். மனித உயிர் விலைமதிப்பற்றது. நம் உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமை நமக்கு இல்லை. பிரச்னைகளுக்குச சரியான  தீர்வுகாண முடியாதவர்களே விரக்தியடைந்து தற்கொலை முடிவெடுக்கின்றனர்’ என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒரு காலத்தில் தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் யாரேனும் கடன் பிரச்னை அல்லது குடும்பப் பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு சென்று விட்டால் உடனடியாக அவரது புகைப்படத்துடன் அவரது உறவினர்கள் முதலில் ஒகேனக்கலுக்கு சென்றுதான் தேடுவார்கள். உள்ளூர் மக்கள் துணையுடன் தொலைந்து போனவர்களை உயிருடனோ அல்லது சடலமாகவோ மீட்டு வருவார்கள் எனக் கூறப்படுவதுண்டு.

இது குறித்து சமூக ஆர்வலர் செந்தி்ல்ராஜா, “தீர்வுகாண முடியாத அல்லது தீர்வே தெரியாத காதல், கடன் மற்றும் குடும்பப் பிரச்சனைகள் பலவற்றினை பொதுமக்கள் நாள்தோறும் சந்தித்து வருகின்றனர். பிரச்சனைகளால் தவித்து வரும் இவர்களில் பலர் தற்கொலைக்கு முயல்கின்றனர். காவல்துறையினர் இவர்களில் 1000 பேரைக் காப்பாற்றியது உண்மையில் பெருமகிழ்ச்சியளிக்கிறது. அதே சமயத்தில் தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் பிரச்னைகளுக்கு எளிய வழியில் தீர்வுகாணக் கூடிய வகையில் கவுன்சிலிங் தரப்பட வேண்டும். மகளிர் சஙகங்கள் மூலம் தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வை அதிக அளவில் ஏற்படுத்தினால் தற்கொலை விகிதாச்சாரத்தைக் குறைக்க முடியும்” என தெரிவித்தார்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz