தமிழின் தொன்மையை, தமிழ்ப் பண்பாட்டின் மேன்மையைப் போற்றிய கோவை கல்லூரி விழா!

Thursday 06, September 2018, 18:57:34

கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், அக்கல்லூரியின் தமிழ் மன்றமான ஸ்ரீசக்தி தமிழ் மன்றம் சார்பாக 2018-2019  கல்வி ஆண்டுக்கான மாணவர் மன்றத் தொடக்கவிழா மற்றும் ஆசிரியர் தினவிழா செப்டம்பர் 5 ஆம் தேதி அக் கல்லூரியின் ஸ்ரீசக்தி கலையரங்கத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் தாளாளர் முனைவர் தங்கவேலு  தலைமையேற்க, கடல் வாணிபம், ஆமைகளின் நீரோட்டம் மற்றும் குமரிக்கண்டம் உட்பட பல்வேறு ஆராய்ச்சிகளை தமிழுக்காக செய்துவரும் கடல் சார் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

கல்லூரி முதல்வர் முனைவர். பிரகாஷ் வரவேற்க விழா தொடங்கியது. தமிழுக்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளுக்கும் உள்ள கடல் வாணிபத் தொடர்பு குறித்துத் தனது  தலைமையுரையில் கல்லூரியின் தாளாளர் தங்கவேலு குறிப்பிட்டார்.

சிறப்பு விருந்தினர் ஒரிசா பாலு தனது சிறப்புரையில், எப்படி தமிழர்கள் உலகெங்கிலும் புலம் பெயர்ந்தனர் என்றும், புலம் பெயர் தமிழர்களிடம் இன்னும் எஞ்சியிருக்கும் தமிழ் கலாச்சாரத்தின் எச்சம் குறித்தும் உரையாற்றினார். தொழில்நுட்பம் பயின்றவர்களால் மட்டுமே தமிழின் அறிவை மீட்டெடுத்து நடைமுறைப்படுத்த இயலும் என்று அவர் கூறியது மாணவர்களால் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டது.

ஸ்ரீசக்தி தமிழ் மன்றத்தின் மாணவர் தலைவி, நான்காம் ஆண்டு கணிப்பொறியியல் துறை மாணவி செல்வி.லீலா பார்கவி, ஸ்ரீசக்தி தமிழ் மன்றத்தின் சாதனைகளைப் பட்டியலிட்டார். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, ஸ்ரீசக்தி தமிழ் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளரான கணிப்பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் செல்வி. சிந்தியா லிங்கசாமியின் நிறைவுரையுடன் விழா நிறைவுற்றது.

விழாவின் நிறைவில் தமிழின் தொழில்நுட்ப அறிவை மீட்டெடுக்கும் பல முயற்சிகளுக்கான சிறந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. சம்பிரதாயமான ஒரு விழாவாக இல்லாமல் தமிழின் தொன்மையை, தமிழ்ப் பண்பாட்டின் மேன்மையை இன்றைய தலைமுறையினருக்கு நினைவு கூறும் ஒரு விழாவாக இந்த விழா நடைபெற்றது வரவேற்கத் தக்க ஒன்று.

© Copyright 2023 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz