கம்போடியா - தமிழர்கள் உருவாக்கிய நாடு!

Friday 14, September 2018, 22:00:12

சிறப்பு ஆய்வுக் கட்டுரை

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் நேரடித் தொடர்பு இன்று நேற்றல்ல,  இரண்டாயிரத்து நூறு ஆண்டுகளாக நீடிக்கிறது.  

உண்மையில் தமிழ் கூறும் நல்லுலகம் வியந்து வியந்து பாராட்டி, பெருமைப்பட்டுக் கொள்ள  ஏராளமான வரலாற்று அம்சங்கள் கம்போடிய மண்ணில் உண்டு என்கிறார்கள் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர்கள். 

அதற்கேற்ப கம்போடியாவில் நாம் கால் வைத்தவுடன் நமக்கு முதலில் தோன்றுவது "அட நம்ம ஊரைப் போல புற்கள், செடி கொடிகள், மா, வாழை, தென்னை... அட நம்ம ஊரைப்போலவே நீர் ஆதாரங்கள், குளங்கள் என "நம்ம ஊர்" உணர்வை ஏற்படுத்தும் நாடாகவே கம்போடியா உள்ளது.

அதன் தட்ப வெப்பம், மண், நீர், காற்று, வெளிச்சம் என அனைத்துமே நமக்கு மிகவும் பழக்கமான ஒரு சூழலுக்குள் நாம் நுழைந்திருப்பதாகத் தோன்ற வைக்கிறது.

உண்மையில், தமிழும், தமிழ் நாகரீகமும் அனைத்து மொழிகள் மற்றும் அதனையொட்டிய நாகரீகங்களுக்கு மட்டும் மூத்தது அல்ல பல பண்பாடுகளுக்கு இன்றளவும் ஒரு ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும் இருந்து வருவது ஆய்வுகளில் நிரூபணம் ஆகிவருகிறது.

கடல் வாணிபம் மூலம் உலகின் அனைத்து மூலை முடுக்குகளுக்கும் பயணித்த தமிழர்கள் அங்கே பொருட்களை மட்டுமல்ல, பண்பாட்டையும் பகிர்ந்து கொடுத்தே வந்திருக்கிறார்கள்.  

பொதுவாகவே தமிழ் மன்னர்கள் இந்தியத் துணைக்கண்டத்தையே அடக்கி ஆண்டிருக்கிறார்கள். வீரமும், விவேகமும அதிகம் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற சேர மன்னன் தற்போதையே கேரளவான சேர நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மண்ணையே ஆண்டிருக்கிறார். அதோடு அவர் நின்று விடவில்லை. எந்த எந்த நாட்டின்  மன்னனெல்லாம் தெனாவெட்டாக ஆணவம் கொண்டிருந்தார்களே அந்த நாட்டின் மீதெல்லாம் படையெடுதது அதைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறார்.

இந்த வெற்றிகளின் அடையாளமாகவே இமயமலையில் வில் குறியீடு பொறித்தான் நெடுஞ்சேரலாதன் என்று குமட்டூர் கண்ணனார் தனது பதிற்றுப்பத்து என்ற  சங்ககால நூலில் ஆவணப்படுத்தியிருக்கிறார்.

நெடுஞ்சேரலாதனின் வழித்தோன்றலில் வந்த சேரன் செங்குட்டுவனைப் பார்த்து ஆரிய மன்னர்களான கனக, விசயர் ஆகியோர் தங்களைப் போன்ற வீரம் மிக்க மன்னர்கள் இருந்திருந்தால் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் வில் பொறித்திருப்பானா? என்று கேள்வி எழுப்பினர். அதாவது பலமற்ற மன்னர்களை வீழ்த்தி நெடுஞ்சேரலாதன் இமயத்தில் வில் கொடி பொறித்துவிட்டார் என்று ஏளனமாகக் கூற, கடும் கோபத்திற்கு ஆளான சேரன் செங்குட்டுவன் கனக, விசயர்கள் நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அவர்களைப் போரில் வீழ்த்தினான்.

அதே இமயமலையில் இரு கற்களை எடுத்து அந்த மன்னர்களின் தலைமேல் வைத்து அவற்றைத் தலையில் சுமந்து கொண்டு தமிழ்நாடு வரைக்கும் நடந்தே வர வைத்ததோடு அந்தக் கல்லைக் கொண்டே கண்ணகிக்குக் கோயில் கட்டினான் சேரன் செங்குட்டுவன் என்று சிலப்பதிகாரத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

ஆக,  அசாத்திய வீரர்களாகவே தமிழர்கள் விளங்கியிருக்கிறார்கள்.

உலக அளவில் வணிகத்தில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே. கடாரம் (தற்போதைய மலேசியா) சென்ற தமிழ் வணிகர்களை அந்நாட்டில் கொடுமைப்படுத்தினார்கள் என்ற தகவல் அறிந்தே ராஜேந்திர சோழன், உலக வரலாற்றில் கேள்வியே பட்டிராத அளவில் யானைப்படைகளைக் கப்பல்களில் கொண்டு சென்று கடாரத்தை வென்றார்.

எந்தக் காலகட்டத்திலும் எவருக்கும் அடிமைப்பட்டிராத வகையில் தலை நிமிர்ந்தே வாழ்ந்திருக்கிறார்கள் தமிழர்கள்.

இந்த மன்னர்கள் இப்படி அடித்து நொறுக்கி தங்கள் வீரத்தை நிலைநாட்டிய அதே வேளை சென்னையில் இருந்து ஆறாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு நாட்டிற்குப் புலம் பெயர்ந்து சென்று ஒரு அரசை நிர்மாணித்து, திறம்பட ஆட்சி செய்து, கட்டிடக்கலையிலும், நிர்வாகத்திலும், வாணிபத்திலும் பிற நாட்டினர் வியந்து பார்த்து ரசிக்கும் அளவிற்கு வாழ்ந்தனர் வேறு ஒரு தமிழர் குழுவினர்.

அவர்களின் அந்த வரலாற்றின் மங்காத சுவடுதான் கம்பூச்சியா, காம்போசம் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான  தற்போதைய கம்போடியா. ஆயிரமாண்டுகளைக் கடந்தும் இந்த நாட்டை நேர்த்தியாக ஆட்சி செய்துள்ளனர் தமிழர்கள்.

கம்போடியாவின் முதல் வளர்ச்சியடைந்த நாகரிகமே கி.பி முதலாம் நூற்றாண்டில்தான் உருவாகிறது. அதை உருவாக்கியவர்கள் தமிழர்கள்தான் எனும்போது அதற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகள் முற்பட்ட நாகரிகத்திற்குச் சொந்தக்காரர்கள் தமிழர்களாகிய நாம்?!

கம்போடியா நாட்டைப் பொறுத்தவரை முதலில் உருவான அரசு புன்னன் அரசு.  இந்த அரசை உருவாக்கியவர், நமது தாயகமான தமிழ்நாட்டில் இருந்து சென்ற கவுண்டின்யா என்ற மன்னர்தான் என்கிறது சான்றுகள்.

கடல் கடந்து கம்போடியா சென்று அங்கிருந்த சிற்றரசுகளின் ஒருவரான நாகர் இனத்து தலைவரின் மகள் சோமா என்பவரைத் திருமணம் செய்கிறார் கவுண்டின்யா. அந்நாட்டின் முதல் பேரரசையும் நிறுவுகிறார் அவர்.

இவரில் இருந்தே தொடங்குகிறது கம்போடியாவின் கட்டமைப்பு.

புன்னன் என்றால் மலை என்ற பொருள். அந்நாட்டு மக்களின் முக்கியத் தொழில்  அரிசி மற்றும் மீன் உற்பத்தி. இன்றும் கம்போடியாவின் முக்கியத் தொழில்கள் இவையே.

கவுண்டின்யா மன்னன் சார்ந்த புன்னன் இனத்தின் கடைசி மன்னர் பெயர் செயவர்மன். இவரது மகன் உருத்திரவர்மனால் கிபி 525 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட மற்றொரு அரசின் பெயர்தான் சென்லா பேரரசு. இந்தப் பேரரசின் தலைநகரின் பெயர் இந்திராபுரி.

சாண்டில்யன் கதை படிப்பதைப்போல இருந்தாலும் இது கதையல்ல நிஜம். 

கம்போடியாவுக்கும், வியட்நாமுக்கும் இடையே நெடிய பகைமை இருந்து கொண்டே இருந்தது. கம்போடியாவில் சென்லா பேரரசு உருவாக்கப்பட்டபின்னரும் இப் பகைமை தொடர்ந்தது. 

உருத்திரவர்மன் உருவாக்கிய சென்லா பேரரசும் வியட்நாமின் சம்பா அரசை எதிர்த்துப் போர் புரிய வேண்டிய நிலைக்கு ஆனது. உண்மையில் சம்பா அரசு என்று கூற முடியாது சம்பா இனக்குழுதான் அது.

இத்தகைய நிலையில் சென்லா பேரரசை உருவாக்கிய உருத்திரவர்மன் ஆட்சியைப் பிடிக்கக் குறுக்கு வழியில் முயன்ற தன் தம்பி குணவர்மனைக் கொன்று விடுகிறார்.

குணவர்மனைக் கொன்ற நிலையில் சம்பா நாட்டுக்கு எதிரான போரில் உருத்திரவர்மன் தன்  இரண்டு மகன்களையும் இழக்கிறார்.

ஆக, ஆட்சிபுரிய வாரிசில்லாத நிலை உருத்திரவர்மனுக்கு ஏற்படுகிறது.

இதையடுத்து தமிழகத்தின் பல்லவ நாட்டைச் சேர்ந்த பீமவர்மன் என்பவரை தன்  மகளுக்கு மணமுடித்து சென்லாவின் அரசராக்குக்கிறார்  உருத்திரவர்மன்.

தமிழகத்தில் பல்லவர்கள்  ஆட்சியை வலுவாக்கிய மூன்றாம் சிம்மவர்மனின் மகனான சிம்ம விஷ்ணுவின் தம்பிதான் இந்தப் பீமவர்மன்.

இந்த சிம்ம விஷ்ணு யார் என்று ஆய்ந்தால், இவரின் மகன் மகேந்திரவர்மன்தான் நமது மகாபலிபுரத்தை நிர்மாணித்தவர்.

கடல்சார் வணிகம் செய்ததன் மூலமாக குணக்கடலை ஆட்சி செய்த மூன்றாம் சிம்மவர்மனின் குமாரர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு மிக நல்லுறவு கொண்டிருந்தனர். இதுவே இத் திருமணம் சம்மந்தம் அமையவும்  வாய்ப்பாக அமைந்துவிட்டது. 

நம்ம ஊரில் இருந்து கம்போடியாவின்   மருமகனாகச் சென்ற பீமவர்மன் (இவருக்குப் பாவவர்மன் என்றும் பெயர் உண்டு) உருத்திரவர்மனின் தம்பி பேரன் சித்திரசேனனின் உதவியோடு வியட்நாமின் சம்பா அரசை வெற்றிகொண்டார். அதுவரை சென்லா சம்பா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தொடர் போர்கள் மட்டுமே நிகழ்ந்தன. சென்லா அரசு அப்போர்களில் பலரை இழந்திருந்தது.

போரில் பங்கெடுத்து வெற்றிக்கு  உதவியதால் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளை சேர்த்து கடலரசு எனவும் இன்னொரு பாதி நிலவரசு எனவும் பிரிக்கப்பட்டு கடலரசு போரின்போது உதவிய சித்திரசேனனுக்கு அளிக்கப்பட்டது. 

சித்திரசேனனே மகேந்திரவர்மன் என்ற பெயரோடு ஆட்சிபுரிந்தார். நம் நாட்டின் பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவின் மகன் பெயரும் மகேந்திரவர்மன் என்பதேயாகும்.

இப்படி நிகழ்வுகள் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்க அதே வேளையில் தமிழகத்தில் இரண்டாம் பரமேஸ்வர பல்லவன் ஆட்சிக்குப் பிறகு பல்லவ நாட்டுக்கு வாரிசற்ற நிலை உருவானது.

இதனால்  கம்போடியாவில் இருநத பீமவர்மன் (கிபி 575-605) வழிவந்த கடவேச அரிவர்மன் (கிபி 764-780) என்பவரின் நான்காவது மகன் பரமேசுவரவர்மன்  12 வயதில் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டு பல்லவ நாட்டின் அரசனாக முடி சூட்டப்பட்டார்.

ஆக, இரண்டு நாடுகளுக்கும் இடையே மன்னர்கள் பரிமாறிக்கொள்வதும் நிகழ்ந்திருக்கிறது.

வரலாறு இப்படிப் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் ஆட்சி ஆள வாரிசுகள் இல்லாத நிலை ஏற்பட கம்போடியாவின் நிலவரசு, கடலரசு ஆகிய இரண்டையும் ஒருங்கிணைக்கிறார் செயவர்மன் என்கிற மன்னர். இந்த செயவர்மனின் மருமகனான பரமேசுவரவர்மனே பின்னாளில் "கெமர்" அரசை உருவாக்கினார்.

அந்தக் கெமர் என்ற பெயர்தான் இன்றும் கம்போடியாவில் நீடிக்கிறது. அந்நாட்டில் பேசப்படும் மொழிக்கும் கெமர் என்றே பெயர்.  

பல்வேறு மொழிகளைக் கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வணிகம் புரியவும், அனைவரையும் ஒருங்கிணைக்கவும் பல்லவ கிரந்தம் என்ற எழுத்துமுறைகளை உருவாக்கினார்கள் பல்லவர்கள். 

தற்கால எழுத்து வழக்கில் பயன்படுத்தப்படும் குறில் மற்றும் நெடில் எழுத்துக்களுக்கான சுழி முறை பல்லவ கிரந்த எழுத்துமுறையில் தான் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ் வட்டெழுத்துக்களுக்கும், மலையாள எழுத்துமுறைக்கும் இதுவே முன்னோடியாகும்.

பல்லவர்களின் கடல் வாணிபத்தால் பல்லவ கிரந்த எழுத்துமுறை தெற்காசிய நாடுகளான பர்மா, இந்தோனேஷியா, தாய்லாந்து, கம்போடியா, கொரியா  போன்றவற்றிற்குச் சென்று சேர்ந்தது. 

கம்போடியாவின் தாய்மொழியான கெமர் இந்தப் பல்லவகிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டதே. 

அங்கோர்வாட்டில் உள்ள கல்வெட்டுக்கள் வடமொழி, கெமர் மற்றும் பிராகிருத மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த பாலி மொழியில் அமைந்துள்ளன.

மொழியோடு நின்றுவிடவில்லை நம் முன்னோர்கள்.

கம்போடியாவின் அங்கோர்வாட் கோவில் மட்டுமல்ல, அங்கோர்வாட் நகரமே  நம் மன்னர்களால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட மாநகரம்தான்.

கெமர் அரசர்களால் நிர்மாணிக்கப்பட்ட அங்கோர்வாட் கோவில் இரண்டாம் சூரியவர்மன் என்ற மன்னனால் பனிரெண்டாம் நூற்றாண்டில் மிகுந்த கலையம்சத்துடன் கட்டப்பட்ட கோவில்.

அங்கோர் நகரம் இரண்டாம் செயவர்மனால் உருவாக்கப்பட்டு, மிகச்சிறந்த நீர் மேலாண்மைத்திட்டத்தின் அடையாளமாக முதலாம் இந்திரவர்மன் மற்றும் அவர் பின் வந்தவர்களால் உருவாக்கப்பட்டது.

தமிழர்களே கலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துத் தங்களை வரலாற்றில் நிலைநிறுத்திக் கொண்டனர். தமிழர்களின்  அறிவுத் திறனையும் அக் கலை உணர்ச்சியில் கலந்தே அவர்கள் வெளிப்படுத்தினார்கள். மேலும், தங்களது வாழ்க்கை முறையையும் அதில் செதுக்கி வைத்தனர். 

பல்லவர்கள் மற்றும் சோழர்கள் இதில் அதிகக் கவனம் எடுத்துக் கொண்டனர். பல்லவர்கள் வழி வந்த கெமர் பேரரசர்களும் தங்கள் முன்னோர்களின் செயலைப் பின்பற்றி அம் மாபெரும் கோயிலையும், நகரையும் நிர்மாணித்தனர். 

தற்போது தேராவாத முறையில் வழிபடப்படும் பௌத்தக் கோயிலாக மாற்றப்பட்டுள்ள அங்கோர்வாட் கோவில் விஷ்ணுவுக்காக கட்டப்பட்ட கோவிலாகும். பல்லவ மன்னர்கள் அனேகர் விஷ்ணு பக்தர்களாக இருந்தனர் என்பது அவர்கள் கட்டிய ஆதிவராகர் கோவில் மற்றும் விஷ்ணுவின் பெயர் தாங்கிய மன்னர்களின் பெயர்களாலும் அறிய முடிகிறது.

உண்மையைச் சொல்லப் போனால் அங்கோர்வாட் கோவில், அங்கோர் மாநகரம் ஆகியவற்றை ஆய்வு செய்ய பல ஆண்டுகள் தேவைப்படும். அந்த அளவு கற்பனை கூட செய்ய முடியாத அளவு பெரிதானது அவை. அங்கோர்வாட் கோவிலை மட்டுமே 27 ஆண்டுகள் கட்டினார்கள் என்றால் எண்ணிப்பாருங்கள். 

காட்டுக்குள் மறைந்து கிடந்த இந்த அங்கோர்வாட் கோவிலைக் கண்டுபிடித்தபின்னர்தான் கம்போடிய நாட்டுடனான 2100 ஆண்டுகாலத் தமிழர் உறவு வரலாறும் நமக்குக் கிடைத்துள்ளன.

 

கட்டுரையாளர் :

சிந்தியா லிங்கசாமி

தலைவர் 

பன்னாட்டுத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு அறக்கட்டளை, 

ITCR Foundation , சென்னை. 

 

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz