வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என திமுக மீது இபிஎஸ், ஓபிஎஸ் பொய்ப் பிரச்சாரம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Wednesday 09, February 2022, 22:20:14

காணொளி மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்திலிருந்து காணொளி வாயிலாக இன்று 4-வது நாளாக தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் "எங்களை குறை சொல்ல எதுவும் கிடைக்காததால் அறநிலையத்துறை மேல் அபாண்டமாக பழி சுமத்துகின்றனர். மதம், சாதியை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. திமுக ஆட்சி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பழனிசாமி, பன்னீர்செல்வம் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.

யார் ஆட்டி வைக்க ஆளுநர் ஆடுகிறார்? பதவியில் பொம்மைகளாக இருக்க நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை சுட்டுக் கொன்றது பழனிசாமியின் சாதனை என சொல்ல முடியுமா?. சாத்தான்குளத்தில் தந்தை, மகனை அடித்துக் கொன்றது அதிமுக அரசின் சாதனை என சொல்ல முடியுமா? தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொல்ல காரணமான பழனிசாமி சர்வாதிகாரியா இல்லை நான் சர்வாதிகாரியா? என்னை சர்வாதிகாரி என்றும் பொம்மை என்றும் வாய்க்கு வந்தபடி பழனிசாமி பேசுகிறார். மக்களை திசை திருப்பும் பொய்களைச் சொல்லி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியை புறக்கணித்தது யார்? தமிழ்நாட்டின் நாட்டுப்பற்றுக்கு மோடி சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டின் தேசப்பற்றுக்கு வரலாறு உள்ளது. தமிழ்நாடு விரோத சக்திகள் இந்த தேர்தல் மட்டுமின்றி அனைத்து தேர்தலிலும் தோற்கடிக்கப்பட வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு மக்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz